எஸ்ஐஆர் பிரச்னை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டத் தயார்!: இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அமித் ஷா சவால்
லக்னோ: வாக்காளர் பட்டியல் திருத்தப் பிரச்னை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டத் தயார் என்று ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்க சவால் விடுத்துள்ளார். நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்ட தீவிர வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் (எஸ்ஐஆர்) சுமார் 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், இது மொத்த வாக்காளர்களில் 14 சதவீதம் என்றும் குற்றம்சாட்டி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடந்த அக்டோபர் தொடக்கம் முதல் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்தும் அவருக்கு எதிராக மக்கள் நீதிமன்ற கண்டன தீர்மானம் நிறைவேற்ற காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவுக்கு நான் இங்கிருந்தே நேரடி சவால் விடுக்கிறேன்; வாக்காளர் பட்டியல் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பாஜக முழுமையாக தயாராக உள்ளது, எங்களிடம் மறைக்க எதுவும் இல்லை, இதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டுவோம்’ என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ‘நாடாளுமன்றத்தில் பேச எதிர்க்கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை, அவையை சுமுகமாக நடத்த விடாமல் முடக்கிவிட்டு, தெருக்களில் இறங்கி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
அரியானா, மகாராஷ்டிரா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் தலைமை தேர்தல் ஆணையர் மீது பழிபோட்டு புலம்புகிறார்கள்’ என்று விளாசினார். முன்னதாக, கடந்த 2025ம் ஆண்டு பருவமழை மற்றும் குளிர்கால கூட்டத்தொடர்களிலும், 2025ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதியன்றும் இதே விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்கியதும், தேர்தல் ஆணையரை நீக்கும் எதிர்க்கட்சிகளின் தீர்மான நோட்டீஸை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் உத்தரபிரதேச சட்ட மேலவைக்கான 11 பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதி தேர்தலில் பாஜக 6 இடங்களையும், சமாஜ்வாடி கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியுள்ள சூழலில், அடுத்ததாக நடைபெறவுள்ள 2027ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக அரசு அதே பலத்துடன் மீண்டும் 3வது முறையாக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


