Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர்... வாக்காளர் பட்டியலா... வாக்குரிமையை பறிக்கும் ஆயுதமா? பட்டியலில் இல்லாத 13 கோடி குரல்கள்: ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்

குறிப்பாக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது மற்ற 2 தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகிய 2 பேர் தங்களுக்கே தெரியாமல் முடிவுகள் எடுக்கப்பட்டதாக கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த நிலையில் எஸ்ஐஆரின் உண்மையான நோக்கம் தான் என்ன என்ற மாபெரும் கேள்வி முன்வைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையர்களின் இந்த ஆட்சேபங்களை முதன் முறையாக அம்பலப்படுத்தியது ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ்.

இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான எஸ்ஐஆர் தொடர்பாக தேர்தல் ஆணை செயல்பாடுகள் மீதான சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும், மறு தேர்தல் நடத்த வேண்டும், எஸ்ஐஆர் பணியை நிறுத்த வேண்டும் எனக் கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் என விவகாரம் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளது. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பற்ற வைத்த போராட்ட நெருப்பு நாடு முழுவதும் பரவி விட்டது.

கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே, தமிழ்நாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே என அடுத்தடுதடுத்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனநாயகத்தை காக்க கைகோர்த்து போராட்ட களத்தில் நிற்கின்றனர். தேர்தல் ஆணையரை நீக்கவும் மறு தேர்தல் நடத்ததும் கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. மாணவ அமைப்புகள் தொடங்கி, வாக்குரிமையை இழந்த பொதுமக்களும் இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கி விட்டனர்.

தேர்தல் ஆணைய சர்ச்சைகளுக்கு மையமானது, வாக்காளர் பட்டியல் திருத்தத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே எழுந்த கருத்து வேறுபாடுகள் தான். வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவது, மேல்முறையீடுகள் மற்றும் வாக்காளர் தரவுத்தளப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இந்த ஆட்சேபனைகளில் இடம்பெற்றுள்ளன. வாக்காளர் பட்டியலுக்கான ஐடி கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக அமைச்சரவைச் செயலாளரிடமும் அவர்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது.

* வாக்காளர் பட்டியல் யார் கட்டுப்பாட்டில்?

எஸ்ஐஆர் விவகாரத்தில் எழுந்துள்ள மற்றொரு முக்கிய கேள்வி, வாக்காளர் பட்டியலில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நடைமுறையில் யாரிடம் உள்ளது என்பதாகும். சட்டப்படி, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் உள்ள தேர்தல் பதிவு அலுவலர் (இஆர்ஓ) வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை விசாரித்தல், பெயரைச் சேர்ப்பது அல்லது நீக்குவது போன்ற பணிகளுக்குப் பொறுப்பானவர். ஆனால் இஆர்ஓ நெட், இசிஐ நெட் போன்ற டிஜிட்டல் மென்பொருள் அமைப்புகள் மற்றும் அணுகல் அதிகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையர்களே கேள்வி எழுப்பியுள்ளனர்.

* கோவாவில் 97 வாக்காளர்கள்

கோவாவில் இந்த பிரச்சினை தீவிரமானது. எஸ்ஐஆரில் முரண்பாடு இருப்பதாகக் குறிக்கப்பட்ட வாக்காளர்களை இஆர்ஓ-க்கள் விசாரித்ததில் 97 பேர் தகுதியானவர்கள் என முடிவு செய்யப்பட்டது. ஆனாலும், மென்பொருளை அணுகும் அதிகாரம் இல்லாததால் அவர்களை சேர்க்க முடியவில்லை.அந்த வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான ‘ரோல் பேக்’ வசதியை வழங்குமாறு கோவா தலைமைத் தேர்தல் அதிகாரி பிப்ரவரி 11 முதல் 17 வரை 8 முறை கோரிக்கை விடுத்ததும் பதிலில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

* படிவம் 6-லும் சர்ச்சை

புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் படிவம் 6-ல் எஸ்ஐஆர் தொடர்பான கேள்விகள் சேர்க்கப்பட்ட விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதல் முறை, இளம் வாக்காளர்கள் கூட முந்தைய எஸ்ஐஆர் ஆண்டில் வாக்காளர் பட்டியலில் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா-பாட்டியின் பெயர் இருந்ததா என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டதாகவும், அதற்கு பதிலளிக்காமல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுபோல் படிவம் 6 மற்றும் படிவம் 8 ஆகியவை சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட படிவங்கள் என்பதால், விதிகளில் திருத்தம் செய்யாமல் அவற்றை மாற்ற முடியாது என விவேக் ஜோஷி மே 16ல் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சுக்பீர் சிங் சாந்து மே 19ல் அதை வழி மொழிந்ததாகவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

* செப்டம்பர் இறுதியில் தீவிரமான எதிர்ப்பு

செப்டம்பர் 23 முதல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள், முன்னாள் தேர்தல் ஆணையர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கத் தொடங்கின. முன்னாள் தேர்தல் ஆணையர்கள் எஸ்.ஒய். குரேஷி, அசோக் லவாசா ஆகியோர் தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமித்தமானவையா அல்லது பெரும்பான்மை அடிப்படையிலானவையா என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத், இரு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகள் ஏற்கப்படவில்லை என்றால், அடுத்த கூட்டத்திலேயே அவற்றை ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். இதையடுத்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், எஸ்ஐஆரை நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன.

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக கோரி இந்தியா கூட்டணி சார்பிலும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தினர்.

* உச்ச நீதிமன்றம் வரை சென்ற விவகாரம்

இதனிடையே ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க கோரிய பொது நலன் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமித்த கருத்துடனோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும் எனவும், 2 தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதோடு, படிவம் 6ல் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ள் நீதிமன்றத்தால் செய்யப்பட்டவை அல்ல என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இதற்கிடையே கடந்த 6ம் தேதி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி நடத்தி, ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இப்போராட்டம் தொடர்ந்து தீவிரமாகிக் கொண்டே வருகிறது.

பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதால் பல கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழந்துள்ளனர் என்பது, ஜனநாயக நாடு என பெருமை கொள்ளும் இந்தியாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவேதான் எஸ்ஐஆர் விவகாரம் என்பது வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற நிர்வாக நடவடிக்கையைத் தாண்டி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, முடிவெடுக்கும் நடைமுறை, டிஜிட்டல் கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் உரிமை தொடர்பான பரந்த விவாதமாக மாறியுள்ளது.

எல்லாவற்றுக்கும் இறுதியாக, எஸ்ஐஆர் விவகாரத்தின் மையக் கேள்வி 13 கோடி பெயர்கள் நீக்கப்பட்டதா என்பதில் மட்டும் இல்லை. அந்தப் பெயர்களை நீக்கும் அதிகாரம் யாரிடம் இருந்தது, முடிவெடுக்கும் நடைமுறை எவ்வளவு வெளிப்படையானது, சட்டத்தின் எல்லைக்குள் அது நடந்ததா, தவறாக நீக்கப்பட்ட ஒரு வாக்காளருக்கு மீண்டும் தனது உரிமையைப் பெற எவ்வளவு போராட வேண்டியுள்ளது என்பதுதான் உண்மையான சோதனை.

வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்துவது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்; ஆனால், அந்தச் செயல்முறையே வாக்காளரை சந்தேகத்தின் கீழ் நிறுத்தத் தொடங்கினால், சுத்திகரிக்கப்படுவது பட்டியலா... அல்லது வாக்குரிமையா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது. அதனால் எஸ்ஐஆரின் இறுதி அளவுகோல், எத்தனை பெயர்கள் நீக்கப்பட்டன என்பதல்ல - ஒரு தகுதியான வாக்காளரின் உரிமை தவறுதலாகப் பறிக்கப்பட்டால், அதை எவ்வளவு விரைவாகவும் வெளிப்படையாகவும் மீட்டுத் தருகிறது என்பதே.

இதனை உறுதி செய்வது தேர்தல் ஆணையத்தின் கடமை. இந்தக் கேள்விகளுடன் மட்டும் எஸ்ஐஆர் விவகாரம் நின்று விடவில்லை. அது இப்போது ‘வாக்கு திருட்டு’ என்ற கரப்பான் பூச்சி கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையாகவும் அரசியல் களத்துக்கு நகர்ந்துள்ளது.

இந்த சந்தேகங்கள் சர்ச்சைகளுக்கெல்லாம் வெளிப்படையான பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. வாக்குரிமை என்பது அரசியலமைப்பு தந்த உரிமை. இது பறிபோய் விடக்கூடாது என்பதில் தான் உண்மையான ஜனநாயகமும் தேர்தல் வெற்றியும் அடங்கியிருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

* வாக்காளர் பட்டியலைச் ‘சுத்தப்படுத்துகிறோம்’ என்ற பெயரில் தொடங்கிய எஸ்ஐஆர்... இன்று தேர்தல் ஆணையத்தையே சுத்தப்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பும் அளவுக்கு சர்ச்சையாகியுள்ளது!

* 13 கோடி பெயர்கள் நீக்கம்… தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே 14 ஆட்சேபனைகள்...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டம்… விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுவிட்டது! இது வெறும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான சர்ச்சையா? அல்லது... வாக்காளரை சரிபார்க்கும் நடைமுறையிலேயே, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சரிபார்க்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளதா? சட்டப்படி அதிகாரம் தேர்தல் பதிவு அலுவலரிடம் ஆனால், தரவுகளை மாற்றும் கட்டுப்பாடு யாரிடம்? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

* கொள்கை நிலைப்பாடா? அரசியல் ஆதாயமா?

நாடு முழுவதும் எஸ்ஐஆருக்கு எதிராக காங்கிரஸ் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் ஆதாயக் கணக்கும் உள்ளதா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. எஸ்ஐஆர் மூலம் வாக்காளர் பட்டியலில் ஏற்படும் மாற்றங்கள் தங்களுக்கு அரசியல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று கருதும் மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்ப்பை தீவிரப்படுத்துகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

குறிப்பாக, கேரளாவில் எஸ்ஐஆர் தொடர்பாக காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளியான சில மாறுபட்ட கருத்துகள், தேசிய அளவிலான எதிர்ப்புக்கும் மாநில அளவிலான அணுகுமுறைக்கும் இடையே முரண்பாடு உள்ளதா? என்ற விவாதத்தை உருவாக்கியுள்ளன. எனவேதான் காங்கிரசின் எஸ்ஐஆர் எதிர்ப்பு வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கான கொள்கை நிலைப்பாடா? அல்லது தேர்தல் கணக்குகளுக்கு ஏற்ப மாறும் அரசியல் நிலைப்பாடா?, ஆதாயம் தேடும் முயற்சியா என அரசியல் நோக்கர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர்.

* வாக்கு இயந்திரத்தை மட்டும் பாதுகாத்தால் போதுமா? நிபுணர்கள் கேள்வி

எஸ்ஐஆர் பற்றி கருத்து தெரிவித்த நிபுணர்கள், தேர்தல் நாளில் வாக்கு இயந்திரத்தை பாதுகாப்பது மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகாது; அதற்கு முன்பே வாக்காளரின் பெயர் இடம்பெறும் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும் என்கின்றனர். எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் நிர்வாக நடைமுறையும் தொழில்நுட்ப அமைப்பும் இணையும் இடத்தில்தான் முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நடவடிக்கை, தவறான பெயர்களை நீக்குவதற்கான சட்டபூர்வ செயல்முறையாக இருக்கலாம். ஆனால், நீக்கப்படும் பெயர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவை எட்டும்போது, வாக்காளரே தனது வாக்குரிமையை நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகிறதா? என்ற கேள்வி எழுகிறது. எனவேதான், வாக்குரிமையைப் பாதுகாப்பது என்பது வாக்குப்பதிவு நாளில் மட்டும் நடப்பதல்ல.

வாக்காளர் பட்டியலில் ஒரு குடிமகனின் பெயர் எவ்வாறு சேர்க்கப்படுகிறது, நீக்கப்படுகிறது, மீண்டும் சேர்க்கப்படுகிறது என்பதிலிருந்தே ஜனநாயகப் பாதுகாப்பு தொடங்குகிறது. எனவே, வாக்கு இயந்திர பாதுகாப்புடன் சேர்த்து, வாக்காளரை நிர்ணயிக்கும் தரவுத்தளத்தின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்பட வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

* மறுதேர்தல் வருமா?

சட்ட விதிகளில் திருத்தம் செய்யாமல் படிவம் 6 திருத்தப்பட்டதாக தேர்தல் ஆணையர்களே ஆட்சேபம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பான தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருத்தப்பட்ட படிவம்-6க்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தரவில்லை. தேர்தல் ஆணையத்தின் எந்த ஒரு முடிவும் சட்டத்துக்கு இணக்கமாக இல்லை என்பது தெரிய வந்தால் அந்த முடிவை நாங்கள் ரத்து செய்வோம் என கடுமையான உத்தரவை பிறப்பித்தது.

எனவே, இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தீர்ப்பு வந்தால், எஸ்ஐஆருக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடந்த தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் முடிவுகளும் ரத்தாகலாம் எனவும். இதன் மூலம் அந்த மாநிலங்களில் மறு தேர்தல் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

* மகாராஷ்டிராவில் 25 தொகுதிகளில் மாயமான 85 சதவீத வாக்காளர்கள்

மகாராஷ்டிராவின் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 25 தொகுதிகளில், எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத பெயர்களில் 85 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் அல்லது ‘கண்டுபிடிக்க முடியாதோர், இல்லாதவர்கள்/ இறந்தவர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் கல்யாண் ரூரல் தொகுதி 95% உடன் முதலிடத்தில் உள்ளது. ஓவலா-மாஜிவாடா 93.3%, நாலாசோபாரா 93% என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும், 59 தொகுதிகளில் இந்த விகிதம் 80 சதவீதத்தையும், 82 தொகுதிகளில் 75 சதவீதத்தையும் கடந்துள்ளது. மாநிலம் முழுவதும், முந்தைய பட்டியலில் இருந்த 9.78 கோடி வாக்காளர்களில் 2.07 கோடி பேர் வரைவு பட்டியலில் இல்லை. இவர்களில் 76.76 லட்சம் பேர் நிரந்தரமாக இடம்பெயர்ந்தோர் என்றும், 75.41 லட்சம் பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள், இல்லாதவர்கள், இறந்தவர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த இரு பிரிவுகளும் சேர்ந்து 1.52 கோடி பேர், அதாவது 73.6 சதவீதம் பேர் இல்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள் ஒரே நேரத்தில் ‘இடம்பெயர்ந்தோர்’ அல்லது கண்டுபிடிக்க முடியாதோர்’ என வகைப்படுத்தப்பட்டதன் பின்னணி என்ன? அவர்களில் உண்மையான வாக்காளர்கள் எத்தனை பேர்? எஸ்ஐஆரின் அடுத்த கட்டத்தில் இதுவும் முக்கியமான ஆய்வுக்குரிய கேள்வியாகிறது.

* எதிர்க்கட்சிகளை வீழ்த்தும் ஆயுதமா?

‘‘எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வாக்காளர்களை நீக்கியதன் மூலம், ஒன்றிய பாஜ அரசு தேர்தல் ஆணையத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறது. எஸ்ஐஆர் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைதான்,’’ என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. சிஜெபியும் இதே கருத்தை முன்வைத்துள்ளது. இதற்கு சான்றாக, எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சிறுபான்மையினர் என்கின்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

அந்த மாநிலத்தில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்பட்ட 60 லட்சம் வாக்காளர்களின் நிலையை நீதித்துறை அதிகாரிகள் பரிசீலிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்களில் 27 லட்சம் பேர் பின்னர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக நீக்கப்பட்ட வாக்காளர்கள் 22 லட்சம் மேல்முறையீடுகளை தாக்கல் செய்த நிலையில், நீதித்துறை அதிகாரிகளால் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களுக்கு எதிராக மேலும் 16 லட்சம் மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்த 16 லட்சம் மேல்முறையீடுகளும் ஒரே அதிகாரியின் உள் நுழைவு (Login) மூலம் தாக்கல் செய்யப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வளவு அதிகமான மனுக்கள் ஒரே அதிகாரியின் உள் நுழைவில் எவ்வாறு பதிவானது என்பதற்கு தெளிவான விளக்கம் இல்லை. இதைச் செய்ய யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையர் சுக்பீர் சிங் சாந்து கேள்வி எழுப்பியிருந்தார்.

* சந்தேகம் கிளப்பும் நடவடிக்கைகள்

இதற்கிடையில்தான் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, கடந்த மார்ச் 18ம் தேதி மட்டும் 10 கலெக்டர்கள், ஒரு மாநகராட்சி ஆணையர் மற்றும் 5 டிஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து மாநிலத்தில் இதுவரை 39 அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். மாற்றப்பட்ட அதிகாரிகளை தேர்தல் தொடர்பான எந்தப் பதவியிலும் தேர்தல் முடியும் வரை நியமிக்கக் கூடாது என்றும் மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கு முன்பாக மாநிலத்தின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி மற்றும் கொல்கத்தா காவல் ஆணையர் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளும் மாற்றப்பட்டிருந்தனர். இதனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே மேற்கு வங்கத்தின் நிர்வாக மற்றும் காவல்துறை உயர் மட்டத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன.

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை பாஜ வரவேற்ற நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில அரசுடன் ஆலோசிக்காமல் அதிகாரிகள் மாற்றப்பட்டதாகவும், தேர்தல் ஆணையம் பாஜவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

* தமிழ்நாட்டில் 74 லட்சம் பேர் நீக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு நாளில், வாக்குச்சாவடிக்கு வந்த பல லட்சம் வாக்காளர்கள், தங்கள் பெயர் பட்டியலில் இல்லாததால் ஏமாற்த்துடன் திரும்பிச் சென்ற அவல நிலை காணப்பட்டது. இந்த மாநிலத்தில் மட்டும் எஸ்ஐஆருக்கு முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, இறுதி பட்டியலில் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இது குறிப்பிடத்தக்க சரிவு.

ஒரே மாநிலத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெயர்கள் குறைந்திருப்பது, எஸ்ஐஆர் நடைமுறை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 103 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 10 சதவீதத்துக்கு மேல், அதிகபட்சமாக 35 சதவீதம் வரை வாக்காளர்கள் குறைந்துள்ளனர். இதில் 26 தொகுதிகளில் 25 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

* ஆட்சேபம் முதல் போராட்டம் வரை...

* 23-09-2026

தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 ஆட்சேபங்கள், எதிர்ப்புகளை பதிவு செய்ததாக தகவல் வெளியானது.

* முன்னாள் தேர்தல் ஆணையர்கள் எஸ்.ஒய். குரேஷி, அசோக் லவாசா உள்ளிட்டோர் முடிவுகள் எப்படி எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிக்க கோரினர்.

* திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட் எதிர்க்கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தின.

* 24-09-2026

கர்நாடகாவில் வாக்காளர் உரிமை மற்றும் தேர்தல் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தி போராட்டங்கள் அரங்கேறின.

* சிஜெபி சார்பில், ஞானேஷ்குமார் 48 மணி நேரத்துக்குள் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டம் நடந்தது.

* எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை ஒரு வார கால நாடு தழுவிய போராட்டத்தை நடத்த அறிவிப்பு வெளியிட்டன.

* 25-09-2026

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, மா.கம்யூ பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபியை சந்தித்து, தேர்தல் ஆணையத்தின் மீது குறையும் நம்பகத்தன்மை குறித்து ஆலோசித்தார்.

* கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், தலைமை தேர்தல் ஆணையரை நீக்கவும் எஸ்ஐஆரை நிறுத்தவும் கோரிக்கை விடுத்தார்.

* சிஜெபி நிறுவனர் அபிஜித் திப்கே, தேர்தல் நடைமுறை பாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருதினால் தேர்தலில் பங்கேற்பதை நிறுத்த வேண்டும் எனக் கூறினார்.

* 26-09-2026

தேர்தல் ஆணையர் பதவி விலகவும், எஸ்ஐஆரை மறு பரிசீலனை செய்யவும் நவீன் பட்நாயக் வலியுறுத்தினார்.

* 28-09-2026

பாட்னாவில் சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் போராட்டம்.

* தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகவும் எஸ்ஐஆரை ரத்து செய்யவும் கோரிக்கை.

* 29-09-2026

முன்னாள் ஒன்றிய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங், 2003க்குப் பிறகு சேர்க்கப்பட்ட சில பெயர்கள் உரிய விசாரணையின்றி நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

* மகாராஷ்டிரா தலைமைத் தேர்தல் அதிகாரி எஸ்.சொக்கலிங்கம், முரண்பாடுகள் உள்ள வாக்காளர் பதிவுகளில் இஆர்ஓ-க்களுக்கு அதிக முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கும் வகையில் இசிஐ நெட்-ஐ மாற்ற வேண்டும் எனக் கூறினார்.

* ஞானேஷ்குமாரை நீக்கம் செய்யக்

கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

* 30-09-2026

முன்னாள்தைலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தால், அடுத்த கூட்டத்திலேயே அந்த முடிவுகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனக் கூறினார்.

* 01-10-2026

தேர்தல் ஆணையம் மீண்டும் கூடி ஆலோசித்தது. ஆந்திரப் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கான எஸ்ஐஆர் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

* ராகுல் காந்தி, படிவம் 6ல் சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டி, அதை யார் உத்தரவிட்டது, யார் கையெழுத்திட்டது என கேள்வி எழுப்பினார்.க்ஷ

* 02-10-2026

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தலைமையில் மும்பையில் போராட்டம் நடந்தது.

04-10-2026

தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி மும்பையில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

* கோடிக்கணக்கானோர் வாக்குரிமையை இழக்கும் வகையிலான நடைமுறையும், அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் நிலையும் உலகளாவிய வாக்குரிமைக் கொள்கைக்கு எதிரானது என உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கருத்து தெரிவித்தார்.

05-10-2026

படிவம் 6ல் மேற்கொண்ட மாற்றங்கள் நீதிமன்றத்தால் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

* தேர்தல் ஆணைய முடிவுகள் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.

* இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இல்லாமல் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறிய மனுவில் ஒன்றிய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்.

* சிஜெபி சார்பில் அக்.10-ல் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு.

* 06-10-2026

மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தேர்தல் ஆணையத்தை நோக்கி பேரணி நடத்தினர். அடுத்த நாள் போராட்டத்தில் ராகுல், பிரியங்கா கைது செய்யப்பட்டனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் நீடித்தது.

மாவட்டம் வாக்காளர் எண்ணிக்கை சரிவு

சென்னை 29.3%

திருப்பூர் 20.0%

செங்கல்பட்டு 18.9%

கோயம்புத்தூர் 16.4%

காஞ்சிபுரம் 14.9%

திண்டுக்கல் 13.6%

வேலூர் 13.0%

ஈரோடு 12.9%

திருவள்ளூர் 11.9%

திருநெல்வேலி 11.6%