எஸ்ஐஆர்-ஐ ஆதரிக்கும் எடப்பாடி பீகார், அரியானாவில் நடந்த குளறுபடியை பார்க்க வேண்டும்: செல்வப்பெருந்தகை ஆவேசம்
சென்னை: எஸ்ஐஆர்ஐ ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி, பீகார், அரியானா மாநிலங்களில் நடந்த குளறுபடிகளை பார்க்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மவுலானா அபுல்கலாம் ஆசாத்தின் 137வது பிறந்த நாள் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவி மரகதம் சந்திரசேகரின் 108வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்திபவனில் வைக்கப்பட்டிருந்த அவர்களது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநிலத் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, சொர்ணா சேதுராமன், இதாயத்துல்லா, மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், மரகதம் சந்திரசேகரின் பேத்தி துக்கினா சந்திரசேகர், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் எம்.முத்தழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து, செல்வப்பெருந்தகை அளித்தபேட்டி: எஸ்ஐஆர்ஐ ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடந்த குளறுபடிகளை பார்க்க வேண்டும். ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளுக்குப் எடப்பாடியை பதில் சொல்ல சொல்லுங்கள். கியூஆர் கோடு ஸ்கேன் செய்யும் அளவுக்கு கிராமங்கள் வளர்ந்துள்ளதா? ஸ்மார்ட்போன் இல்லாத விவசாயிகள் எப்படி இதை டவுன்லோட் செய்ய முடியும்?
பாஜ சொல்வதை தலையாட்டி பொம்மையாக தேர்தல் ஆணையம் கேட்டு வருகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் தலைகுனிவு ஏற்பட கூடாது என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தோடு செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் மீது கண் வைத்து உள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி, நேர்மை, ஆட்சி ஆகியவற்றை பார்த்து எரிச்சல் மற்றும் துனபம் அடைந்து தமிழகத்திற்கான நிதி கொடுக்க கூடாது என ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.