Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர் எதிர்ப்பு

கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு 2028ம் ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. அதே சமயம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குள் பெங்களூரு பெருநகர 5 மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸ் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேர்தல் நடக்கும் மாநிலங்களில் முன்னதாக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணிகளை மேற்கொண்டது. இதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தாலும் நீதிமன்ற வழிகாட்டுதல் படி இந்திய தேர்தல் ஆணையம் தனது பணியை செய்து முடித்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஜூன் 30 முதல் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து திருத்தப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வாக்காளர் திருத்தப்பணிகள் மேற்கொண்டு ஒருவாரம் ஆன நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் முறைகேடு நடந்துள்ளது.

காங்கிரஸ் அரசு ஊழியர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பெங்களூரு மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை சேர்த்து வருகிறது என்று மதசார்பற்ற ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. வாக்காளர் திருத்த படிவங்களை கொண்டு செல்லும் அரசு ஊழியர்கள் யாரும் வீடு வீடாக செல்வதில்லை என்றும் கோயில்கள், திருமண மண்டபம், மசூதி, சமுதாய கூடங்களில் அமர்ந்து கொண்டு உள்ளூர் ஆட்களை அனுப்பி படிவங்களை கொடுத்து நிரப்பி எடுத்து வர சொல்கிறார்கள்.

இதில் காங்கிரஸ் கட்சியினரே பெருமளவில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் மாநிலத்தில் வங்கதேசத்தினரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது. எனவே இதுவரை நடந்த பணிகளை நிறுத்திவிட்டு புதியதாக மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்பு குமாரை சந்தித்்து பாஜ-மஜதவினர் மனு கொடுத்துள்ளனர். மேலும் இவர்கள் டெல்லி சென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தும் மனு கொடுத்துள்ளனர்.

தேவைப்பட்டால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பெங்களூருவில் சில வார்டுகளில் மட்டும் மாநில தேர்தல் ஆணையம் மாற்று வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்த வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் சுதந்திரமாக நடந்து வருவதாகவும், இதில் மாநில அரசு தலையீடு எதுவும் நடக்கவில்லை என்றும் முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். தீவிர வாக்காளர் திருத்தப்பணி படிவங்கள் 80 சதவீதம் வினியோகிக்கப்பட்டுவிட்டது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிகளின் போது மற்ற மாநிலங்களில் ஒன்றிய பாஜ அரசு மீதும், இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதும் ஆளும் கட்சி குற்றச்சாட்டு வைத்த நிலையில் கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளான பாஜ-மஜத ஆளும் காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளதை அரசியல் விமர்சகர்கள் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள்.