Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எஸ்ஐஆர் திருத்த படிவத்தில் குழப்பங்கள்: கூடுதல் அவகாசம் மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த படிவத்தில் பல குழப்பம் உள்ளதாக மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார் ஆகியோர் நேற்று தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து சிறப்பு வாக்காளர் திருத்தத்தின் போது வாக்காளர்கள் விடுபடாமல் அனைவரையும் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கடிதம் அளித்தனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

27.10.2025ல் முடக்கப்பட்டிருக்கிற கடைசி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் மட்டுமே கணக்கெடுப்பு படிவம் அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இது 2 பிரதிகள் வழங்கப்பட்டு நிரப்பி கொடுக்கப்பட்டு பின்னர் ஒரு பிரதி ஒப்புகைச் சீட்டாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் ஒரு படிவம் மட்டுமே வழங்குகிறார்கள். 18 வயது நிரம்புகிற வாக்காளர்களுக்கும் கணக்கெடுப்பு படிவம் கொடுக்க மறுக்கப்படுகிறது.

2002க்கு முன்பு வாக்காளர்களாக இருந்தவர்களினுடைய தாய், தந்தை, உறவினர்கள் பற்றிய விவரங்கள் பெரும்பாலும் இந்த பட்டியலில் கிடைப்பதில்லை. எனவே, படிவத்தின் இரண்டாவது, மூன்றாவது பத்திகள் நிரப்பப்படுவது நடைமுறை சாத்தியமற்றதாக உள்ளது. கணக்கெடுப்பு படிவத்தில் புதிய இடங்களுக்கு மாறியிருப்பவர்கள் அந்த விலாசத்தை எழுதி மாற்றிக் கொள்வதற்கு இந்த படிவம் உதவி செய்யவில்லை.

புகைப்படம் ஒட்டுவதா, வேண்டாமா என்பது குறித்து இறுதியான பதில் 29.10.2025 கூட்டத்தில் சொல்லப்படவில்லை. மேலும், அரசியல் கட்சிகள் பாகம் வாரியாக முகாம்கள் நடத்தி நிரப்பிய படிவங்களுக்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது அதற்கும் எந்த பதிலையும் கூறவில்லை. இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கும் போது பெயர் மற்றும் உறவினர் பெயரில் ஏற்கனவே பிழையாக இருந்து தற்போது பிழைகள் திருத்தப்பட்டால் அந்த படிவத்தை இணையதளம் ஏற்றுக் கொள்வதில்லை.

இணையதளம் மூலம் விண்ணப்பிப்பவர்கள் பெயருக்கு பின்னூட்டமாக சாதிப்பெயர் நிரப்பப்பட இயலாததால் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணி நிமித்தமாக சென்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள் வாழக்கூடிய மலைப்பகுதிகளில் படிவங்கள் கொடுக்கப்படவில்லை என்ற புகார்கள் வந்திருக்கின்றன. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.