Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டிலேயே எஸ்ஐஆருக்கு பின் நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் பீகாரில் பாஜ கூட்டணி வெற்றி: ஆர்ஜேடி, காங்கிரஸ் படுதோல்வி

பாட்னா: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் மூலம் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றது. லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி படுதோல்வி அடைந்தது. 243 தொகுதிகள் கொண்ட பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்தது.

அங்கு கடந்த 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு தேர்தல் கமிஷன் சார்பில் பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இறுதியாக 7.42 கோடி வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றனர். அதை தொடர்ந்து இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் ஆளும் தே.ஜ. கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ தலா 101 தொகுதிகள், லோக் ஜன சக்தி-ராம் விலாஸ்-29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.

இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட்-எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் களம் கண்டன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. நடந்து முடிந்த இரு கட்ட தேர்தலிலும் வரலாற்று சாதனையாக மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவானது. பீகார் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 46 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகளும், அதை தொடர்ந்து மின்னணு எந்திர ஓட்டுகளும் எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே பா.ஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இந்தியா கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பின்தங்கி இருந்தனர். நேரம் செல்லச் செல்ல தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முன்னிலை அதிகரித்தது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஆட்சி அமைக்க தேவையான 122 இடங்களையும் தாண்டி 200 தொகுதிகளுக்கு மேல் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வியாதவ், ராகோபூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது மேலும் அதிர்ச்சி அளித்தது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 6 தொகுதிகளிலும், 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதாதளம் 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ், ஆம்ஆத்மி கட்சிகள் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

இறுதியில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி நான்கில் மூன்று பங்கு இடங்களையும் தாண்டி 202 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 34 தொகுதிகளையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இந்த வெற்றி மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி சாதனை வெற்றியை அடைந்தது. தாராபூர் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் சாம்ராட் சவுத்திரி 45,843 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

லகிசராய் தொகுதியில் போட்டியிட்ட இன்னொரு துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா 24,940 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். ராகோபூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்த தேஜஸ்வி யாதவ் 14,532 வாக்கு வித்தியாசத்தில் இறுதி கட்டத்தில் வென்றார். மொகாமா தொகுதியில் பிரசாந்த் கிஷோர் கட்சி நிர்வாகி துலர்சந்த்யாதவ் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஐக்கிய ஜனதாதளம் கட்சி வேட்பாளர் அனந்த்குமார் சிங் 28,206 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பீகார் அமைச்சர்கள் பிரேம் குமார், மகேஷ்வர் ஹசாரி, சஞ்சய் சரோகி, ராஜூகுமார் சிங் உள்ளிட்டோரும் வெற்றி பெற்றனர். யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ேடார் கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

* தட்டுத்தடுமாறி வென்ற தேஜஸ்வி

ராகோபூர் தொகுதியில் ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜ வேட்பாளர் சதிஷ்குமாரை தோற்கடித்து, ராகோபூர் தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். 2015, 2020ல் நடந்த தேர்தலிலும் அவர் இந்த தொகுதியில் தான் வென்றார். ஆனால் இந்த முறை வாக்கு எண்ணிக்கையின் போது பலமுறை பின்னடைவை சந்தித்தார். இறுதியில் தேஜஸ்வி வெற்றி பெற்றார். அவர் 1,18,597 வாக்குகள் பெற்றார். பா.ஜ வேட்பாளர் சதீஷ்குமார் 1,04,065 வாக்குகள் பெற்றார்.

* லாலு பிரசாத் மூத்த மகன் தேஜ்பிரதாப் 3வது இடம்

பீகார் தேர்தலில் லாலுபிரசாத் யாதவ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், ஜனசக்தி ஜனதாதளம் கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார். அவரும் மஹூவா தொகுதியில் களம் கண்டார். இந்த தொகுதியில் தேஜ்பிரதாப் யாதவ் 3வது இடத்தை மட்டுமே பிடித்தார். அவர் 35,703 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். சிராக் பாஸ்வான் கட்சி வேட்பாளர் சஞ்சய்குமார் சிங் 87,641 ஓட்டுகள் பெற்று இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம் வேட்பாளர் முகேஷ்குமார்42,644 ஓட்டுகள் பெற்று 2வது இடம் பிடித்தார்.

* நிதிஷ் முதல்வர் ஆவாரா?

பீகாரில் கடந்த 2000ஆண்டு முதல் முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் இருந்து வருகிறார். அவரது தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்தது. ஆனால் அவரை முதல்வராக பதவி ஏற்க பா.ஜ அனுமதிக்குமா என்பது தெரியவில்லை. இதுபற்றி வெளிப்படையாக அறிவிக்கவும் இல்லை. ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் புதிய முதல்வராக நிதிஷ் மீண்டும் பதவி ஏற்பார் என்று டிவிட் செய்து விட்டு, உடனே அதை நீக்கி விட்டது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

* மொத்த இடங்கள் 243

பெரும்பான்மைக்கு தேவை 122

தேசிய ஜனநாயக கூட்டணி 202

இந்தியா கூட்டணி 35

ஏஐஎம்ஐஎம் 5

பகுஜன் சமாஜ் 1

ஜன்சுராஜ் 0

* தேசிய ஜனநாயக கூட்டணி

கட்சிகள் போட்டி வெற்றி

1.பா.ஜ 101 89

2. ஐக்கிய ஜனதாதளம் 101 85

3. லோக்ஜனசக்தி(ராம்விலாஸ்) 29 19

4. இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 6 5

5. ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா 6 4

* இந்தியா கூட்டணி

1. ராஷ்ட்ரீய ஜனதாதளம் 143 25

2. காங்கிரஸ் 61 6

3. மார்க்சிஸ்ட் எம்எல் 20 2

4. மார்க்சிஸ்ட் 4 1

5. இந்தியா இன்குளுசிவ் கட்சி 3 1

6. இந்திய கம்யூனிஸ்ட் 6 0

7. விகாஷீல் இன்சான் கட்சி 15 0