எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கும் பணி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் சென்று உதவுவது என்ன தவறு? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி
திருச்சி: எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் வழங்கும் பணியில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்ட முகவர்கள் சென்று உதவுவது என்ன தவறு? என்று அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பி உள்ளார். திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டவர்கள் (பிஎஸ்ஓ-க்கள்), வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏ 2) ஒரு நாளைக்கு 50 வாக்குகள் வரை பார்க்க தேர்தல் ஆணையத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் பிஎல்ஏ 2 முகவர்கள் அங்கீகரிக்கப்பட்டவர்கள், இதில் என்ன தவறு உள்ளது. அரசு அலுவலர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் இந்த விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தருவதில் எந்த தவறும் இல்லை. வாக்குகள் விடுபட்டுபோனால் நாளை ஆட்சியில் நீங்கள் தான் இருந்தீர்கள், வாக்கு விடுபட்டு விட்டது என குறை கூறுவார்கள். எனவே எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது.
ஒன்றிய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை, தமிழ்நாடு அரசு சார்பில் மூன்று முறை அல்லது நான்கு முறை கடிதம் எழுதினால் மட்டுமே அவர்கள் நிதி விடுவிக்கின்றனர். திமுக அரசு, ஒன்றிய அரசின் திட்டங்களை தடுக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதில் நியாயம் இல்லை.
திமுக நல்லாட்சி செய்கிறது என்பதை அவர் ஒத்துக்கொள்வாரா. ஒன்றிய அரசு ஜல்ஜீவன் திட்டம், 100 நாள் வேலை திட்டம், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் தட திட்டம் என எதற்கும் நிதி ஒதுக்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரியை சரியாக தமிழ்நாடு செலுத்தி வருகிறது. இருந்தபோதும் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்க வில்லை இவ்வாறு அவர் கூறினார்.
* திருப்பதி கோயிலுக்கு நன்கொடை வழங்க கூடாதா?
அமைச்சர் கே.என்.நேருவிடம், திருப்பதி கோயிலில் அன்னதானத்திற்காக ரூ.44லட்சம் வழங்கியதாக வைரலான புகைப்படம் குறித்த கேள்விக்கு, ‘ஏன் நான் திருப்பதி கோயிலுக்கு நன்கொடை வழங்க கூடாதா? நான் வழங்கியது குறித்து விமர்சனம் செய்தால் செய்யட்டும். நான் என்ன செய்தாலும் அவர்கள் என்னை நல்லவன் என கூறப்போவது இல்லை’ என்றார். முன்னாள் அமைச்சர் வேலுமணி 210 தொகுதியில், அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, ‘ஏன் 24 தொகுதிகளை மட்டும் விட்டுவிட்டார்’ என கிண்டல் அடித்து அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டார் சென்றார்.