Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எஸ்ஐஆருக்குப் பிறகு 5 மாநிலங்களில் வாக்காளர் எண்ணிக்கை 12% குறைந்தது: உபியில் மட்டும் 2 கோடி பேர் நீக்கம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதன் தரவுகளை தேர்தல் ஆணையமும், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் சமீபத்தில் வெளியிட்டனர். அதன்படி, 5 மாநிலங்களிலும் எஸ்ஐஆருக்கு முன்பு 18.71 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 16.43 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 2.29 கோடி (12.2 சதவீதம்) வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாநிலங்களில் அதிக வாக்காளர்களைக் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மட்டும் மொத்த நீக்கத்தில் 90 சதவீதம் பதிவாகியுள்ளது. 2ம் கட்டமாக எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்ட உபியில் 15.44 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை வரைவுப் பட்டியலில் 12.56 கோடியாக குறைந்து, இறுதியாக 13.40 கோடியாக பதிவாகியுள்ளது. சுமார் 2.04 கோடி வாக்கார்கள் குறைந்துள்ளனர். இது 13.24 சதவீதம். 5 மாநிலங்களில் இதுவே மிக அதிக சரிவாகும். வரைவு பட்டியலில் 2.89 கோடி பேர் நீக்கப்பட்ட நிலையில், அவர்களில் 84 லட்சம் பேர் பெயர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன.

3ம் கட்டமாக எஸ்ஐஆர் நடந்த பஞ்சாப்பில் 2.15 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை வரைவு பட்டியலில் 1.94 கோடியாக சுருங்கி, இறுதியாக 2.01 கோடியாக பதிவாகியுள்ளது. 14 லட்சம் (6.34 சதவீதம்) வாக்காளர்கள் குறைந்துள்ளனர். மணிப்பூரில் எஸ்ஐஆருக்குப் பிறகு 20.9 லட்சம் வாக்காளர்களில் இருந்து 19.3 லட்சம் பேராக குறைந்தது. கோவாவில், வாக்காளர்களின் எண்ணிக்கை 11.85 லட்சத்தில் இருந்து 10.58 லட்சமாக 10.76 சதவீதம் குறைந்தது.