எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்: குடியரசு தலைவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: நாடு முழுவதும் எஸ்ஐஆர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தேர்தல் ஆணையம் என்பது தலைமை தேர்தல் ஆணையர் ஒருவரின் தனிப்பட்ட அமைப்பல்ல; 3 உறுப்பினர்களை கொண்ட அரசியலமைப்பு சட்டப்படியான அமைப்பு ஆகும். மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் மீறி தலைமை தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துள்ளார். தமிழ்நாட்டின் எஸ்ஐஆர்-க்கு முந்தைய பட்டியலில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். வரைவுப் பட்டியலில் 5,43,76,755 வாக்காளர்களும், இறுதி பட்டியலில் 5,67,07,380 வாக்காளர்களும், தேர்தல் பட்டியலில் 5,73,43,291 வாக்காளர்களும் இருந்துள்ளனர். எஸ்ஐஆர்-க்கு பிந்தைய வரைவு பட்டியலில் முந்தைய பட்டியலைவிட 97,37,832 வாக்காளர்கள் குறைவாக இருந்தனர்.
திருத்த மேல்முறையீட்டு நடைமுறைகளுக்கு பிறகும் இறுதி பட்டியலில் 74,07,207 பேர் குறைவாக இருந்தனர். 234 தொகுதிகளிலும் சராசரியாக தொகுதிக்கு சுமார் 31,655 பேர் நீக்கப்பட்டுள்ளனர். பல தேர்தல்களில் வாக்களித்த நீண்டகால குடியிருப்பாளர்கள் ‘முகவரியில் இல்லை’ அல்லது ‘இடம்பெயர்ந்தவர்’ என குறிக்கப்பட்டு, தனிப்பட்ட அறிவிப்பும் விசாரணை வாய்ப்பும் வழங்கப்படாமல் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் குறைவான நீக்கங்கள் ஏற்பட்ட 99 தொகுதிகளில் தவெக 24 இடங்களிலும், திமுக 27 இடங்களிலும் வென்றதாகவும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான நீக்கங்கள் ஏற்பட்ட 69 தொகுதிகளில் தவெக 52 இடங்களிலும், திமுக 11 இடங்களிலும் வென்று உள்ளது. 80 ஆயிரத்துக்கும் அதிகமான நீக்கங்கள் ஏற்பட்ட 10 தொகுதிகளிலும் தவெக வென்றுள்ளது.
2021ல் திமுக வென்ற தொகுதிகளில் சராசரியாக 31 ஆயிரம் பெயர்களும், அதிமுக வென்ற தொகுதிகளில் சுமார் 27 ஆயிரம் பெயர்களும் நீக்கப்பட்டதாக கூறி, இந்த மாற்றங்கள் தேர்தல் முடிவுகளைப் பாதித்திருக்கக்கூடும். திருப்பத்தூரில் திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார், கன்னியாகுமரி, போளூர், திருக்கோவிலூர், பரமத்தி வேலூர் தொகுதிகளில் முறையே 214, 227, 285, 308 வாக்குகள் வித்தியாசத்தில் முடிவுகள் அமைந்துள்ளது. கொளத்தூரில் 2021 தேர்தலில், நான் 1,05,522 வாக்குகள் பெற்று 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளேன், அதிமுக வேட்பாளர் எம்.ஆதிராஜாராம் 35,138 வாக்குகள் பெற்றுள்ளார்.
அப்போது 2,84,056 வாக்காளர்கள் இருந்த தொகுதியில் 2025 டிசம்பருக்குள் சுமார் 1,03,812 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. 2026ல் நான் 74,202 வாக்குகளும், வெற்றிபெற்ற தவெக வேட்பாளர் 82,997 வாக்குகளும் பெற்று, 8,795 வாக்குகள் வித்தியாசம் தான். எனவே, வெற்றியைத் தடுக்கும் வகையில் கொளத்தூர் தொகுதியில் பெருவாரியான அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் 2025 அக்டோபர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலத்தில் குறைந்தது 14 சந்தர்ப்பங்களில் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளைப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின்றி அதன் பெயரில் உத்தரவுகள் வெளியிடப்பட்டதாகவும், புதிய தகவல் தொழில்நுட்பத் தொகுதிகள், இணையவழி தளங்கள், வெளிநாட்டுப் பயண அனுமதிகள், கூட்ட நிகழ்ச்சி நிரல்கள், வாக்காளர் பட்டியல் தரவுகளின் மையப்படுத்தல், படிவம் 6 மாற்றங்கள், மேற்கு வங்க மேல்முறையீடுகள் உள்ளிட்டவை குறித்து ஆட்சேபனைகள் எழுந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்துக்கு அளித்த பதிலில், தற்போது நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் ஒப்பிட்டுச் சரிபார்ப்பதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் 2003ம் ஆண்டின் உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும்கூட தேர்தல் ஆணையத்தால் சமர்ப்பிக்க முடியவில்லை. 2026 ஜூலை மாதம் ECINET இணையதளத்தில் இடம்பெற்ற படிவம் 6ல் விண்ணப்பதாரர் அல்லது அவரது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரின் பெயர்கள் முந்தைய எஸ்ஐஆர் பட்டியலில் இருந்தனவா எனக் கேட்கும் நிபந்தனை சேர்க்கப்பட்டடுள்ளது. இந்த மாற்றத்துக்கு 16-5-2026 அன்று டாக்டர் விவேக் ஜோஷி ஆட்சேபனை தெரிவித்ததாகவும், டாக்டர் சுக்பீர் சிங் சந்து அதனை ஏற்றுள்ளார். 5-10-2026 அன்று உச்சநீதிமன்றம் மாற்றப்பட்ட படிவம் 6க்கு ஒப்புதல் அளித்ததாகக் கருத முடியாது எனத் தெளிவுபடுத்தியது.
தேர்தல் ஆணையத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் போன்ற ஓர் அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அலுவலர் (AERO) அல்லது வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) ஒப்புதல் அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்கு அதிகாரம் பெற்றிருப்பது சட்டவிரோதமானது. இது 1950 மற்றும் 1951ம் ஆண்டுகளின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின் விதிகளுக்கு முரணானது. இதனால்தான், சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின்போது, திமுகவின் முகவர்கள் முனைப்புடன் உதவியபோதிலும், பல ஆண்டுகளாகத் தங்கள் தொகுதியில் வசித்து, முந்தைய பல தேர்தல்களில் வாக்களித்த உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.
தற்போது பொதுவெளியில் வெளியாகியுள்ள ஆதாரங்களின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 324(5)வது பிரிவை, 124(4)வது பிரிவுடனும், 2023ம் ஆண்டுச் சட்டத்தின் 11வது பிரிவுடனும் இணைத்துப் படிப்பதன் அடிப்படையில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் குடியரசுத் தலைவர் செய்தி அனுப்பலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் 324(2)வது பிரிவின்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதையும், அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்கும் கடமையை நிறைவேற்றுவதற்கு, தற்போதைய சூழலைவிட மிக அவசியமான ஒரு தருணம் வேறெதுவும் இருக்க முடியாது.
அரசியலமைப்பின் 86(2)வது உறுப்பின்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் செய்தி அனுப்பி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான மனுவிலும் பொதுவெளியிலும் உள்ள குற்றச்சாட்டுகளைப் பரிசீலித்து, அரசியலமைப்பின் 324(5)வது உறுப்பு, 124(4)வது உறுப்பு மற்றும் 2023ம் ஆண்டு சட்டத்தின் 11வது பிரிவின்படி பதவிநீக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும். அரசியலமைப்பின் 78வது உறுப்பின்படி பிரதமரிடமிருந்து தகவல்களைப் பெற்று, இந்த நாடாளுமன்ற நடவடிக்கை முடிவடையும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் தனிப்பட்ட முறையில் ஆணையத்தின் அதிகாரங்களைப் பயன்படுத்தாதிருப்பதையும், ஒவ்வொரு முடிவும் 2023ம் ஆண்டு சட்டத்தின் 18வது பிரிவின்படி கூட்டு முடிவாக எடுக்கப்பட்டு அதன் கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
2025 எஸ்ஐஆர் நடவடிக்கையின்போது தமிழ்நாட்டின் வரைவுப் பட்டியலில் இடம்பெறாமல் போன 97,37,832 வாக்காளர்களின் பெயர் நீக்கங்களின் சட்டப்பூர்வத்தன்மை, 23-2-2026 இறுதிப் பட்டியல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் மீதான தாக்கம் ஆகியவை குறித்து அரசியலமைப்பின் 143வது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட எஸ்ஐஆர் அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை எதிர்காலத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களில் பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தி, எஸ்ஐஆர்-க்கு முந்தைய பட்டியலை மீண்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டப்படி திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் எஸ்ஐஆர் நடவடிக்கையை முழுமையாக ரத்து செய்து, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960 ஆகியவற்றின்படி உரிய கால அவகாசம், தனிப்பட்ட அறிவிப்பு, விசாரணை வாய்ப்பு வழங்கி வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ECINET, ERONET தொழில்நுட்பக் கட்டமைப்புகள் மற்றும் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு வெளியிலுள்ள நிபுணர்களால் தடயவியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் மென்பொருள் கட்டுப்பாடுகள், பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்வதுடன், 24-6-2025 உத்தரவு தொடர்பான கோப்புகள், நிகழ்ச்சி நிரல்கள், கூட்டக் குறிப்புகள், ஆணையர்களின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி அதன் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகள் 2023ம் ஆண்டு சட்டத்தின் 18வது பிரிவின்படி செல்லத்தக்கவையா என்பது குறித்து அரசியலமைப்பின் 143வது உறுப்பின்படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக் கருத்தைப் பெற வேண்டும். தேர்தல் நடைமுறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்; அதுவரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் தேர்தல்களில் VVPAT ஒப்புகைச் சீட்டுகளை 100 விழுக்காடு எண்ணி ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரின் வாக்குரிமையை பாதுகாக்க குடியரசு தலைவர் தமது அரசியலமைப்பு அதிகாரங்களுக்குட்பட்டு தேவையான பிற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்தியத் தேர்தல் ஆணையம் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெற்றுள்ள நற்பெயர் எந்தவொரு தனிநபருக்கும் அல்ல; இந்திய மக்களுக்கே சொந்தமானது என்பதை மனு வலியுறுத்துகிறது. ஆணையத்தின் முடிவுகள் தங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டதாக அதன் உறுப்பினர்களே பதிவு செய்திருக்கும் ஆட்சேபனைகளைச் சுட்டிக்காட்டி, தேர்தல் நிர்வாகம் ஆட்சியிலிருக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்க வேண்டும் என்ற டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்புக் கொள்கையைப் பாதுகாக்க, தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய குடியரசு தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


