இரவில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்து அவர்களை பாலியல்
துன்புறுத்தலுக்கு ஆளாக்கி மேலும் உடனிருக்கும் ஆண் நண்பர், காதலர், கணவன் என யார் இருந்தாலும் இருவரையும் கொலை செய்யும் ஒரு இரவு அரக்கனைத் தேடும் பயணம் தான் “சீக்கட்டிலோ” தெலுங்கு படத்தின் கதை. இரவிலோ என்பதுதான் தெலுங்கில் “சீக்கட்டிலோ” என அழைக்கப்படுகிறது. ஆந்திராவின் குறிப்பிட்ட கிராமங்கள், நகரங்கள் என ஒரு வட்டத்துக்குள் பாரபட்சமே இல்லாமல் நிகழும் சீரியல் கொலைகள். இவராக இருக்குமா, அவராக இருக்குமா எனும் தேடலுடன் பயணிக்கும் பெண் பத்திரிகையாளர் சந்தியா நெல்லூர் (சோபியா துலிபலா). இதற்கிடையில் சக தோழியும், அவரது காதலரும் இந்த சீரியல் கொலைகாரனின் கொடூர தாக்குதலில் கொலை செய்யப் படுகின்றனர். ஆனால் மீடியாவின் ஆணாதிக்க மனநிலை, கார்ப்பரேட் ரூல், மீடியா டி.ஆர். பி என இந்த செய்தியை நீர்த்துவிடச் செய்கிறது. இதனால் வேலையை விட்டுவிட்டு குரல்களில் ஒலிக்கும் பாட்கேஸ்ட் மூலம் சமூகத்தில் நடக்கும் இந்த அவலங்களை வெளியே கொண்டு வருகிறார் சந்தியா. அவருக்குத் துணையாக சில பாதிக்கப்பட்ட பெண்களும் கைகோர்க்கிறார்கள்.
அங்கேயும் அரசியல் தலையீடு, பெண்தானே என்கிற ஏளன மற்றும் காமப் பார்வைகள் விழுகின்றன. அனைத்தையும் புறந்தள்ளி கொடூரக் கொலையாளனை, நெருங்கிய நண்பர்கள், மற்றும் ஒரு சில நேர்மையான காவலர்கள் உதவியுடன் தேடிக் கண்டடைகிறார். இதற்கிடையில் சிறுவயதில் ஒரு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் பல ஆண்களுக்கு இடையே மாட்டிக்கொண்டு தவித்த நினைவுகள் அவ்வப்போது சந்தியாவை இடையூறு செய்கின்றன.அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு அங்கே என்ன வேலை, பொண்ணு நீ சும்மா இரு போன்ற பழமைகளை கேள்வி கேட்கிறது திரைக்கதை. மேலும் எல்லா ஆண்களும் கேட்டவர்கள் அல்ல, நல்லவர்களும் உள்ளனர் என்கிற கருத்தையும் முன்வைக்க தவறவில்லை திரைக்கதை. போலவே நம் மத்தியிலேயே நல்லவன் போல் இருப்பவர் எல்லாரும் நல்லவர்கள் இல்லை என்பதையும் கதை பதிவு செய்கிறது. இருட்டு ஆபத்தானது அல்ல, இருட்டில் செயல்படும் மனிதர்கள் தான் ஆபத்தானவர்கள் அவர்களைக் களை எடுத்தாலே பகலோ, இரவோ எல்லாமே பாதுகாப்பானதுதான் என்பதே கதை சொல்லும் கரு. மேலும் ஒரு பெண் தனக்கு நிகழும் பிரச்னையை தைரியமாக வெளியே சொல்ல முயன்றால் அவளுக்கு சமூகம் கைகொடுத்து உதவினால் இன்னும் நிறைய குற்றங்கள் தடுக்கப்படும் என்பதே “சீக்கட்டிலோ” திரைப்படம் சொல்லும் நீதி.
அதே போல் குற்றங்களுக்கு உண்டான தண்டனைகளும், அதைத் தட்டிக்கேட்கும் மக்களுக்கான ஆதரவுகளும் கூட இங்கே மிகக் குறைவுதான். அதிகார பலம், ஆதிக்கம், ஆண் - பெண் பாகுபாடு, மீடியா கார்ப்பரேட் அடக்குமுறை என களையெடுக்கப்பட வேண்டிய சமூகப் பிரச்னைகள் பல இங்கே நீர்த்துப் போகின்றன என்பதையும் இப்படம் சொல்லத் தவறவில்லை. டி. சுரேஷ் பாபு தயாரித்த இந்தப் படத்தை ஷரன் கோப்பிசெட்டி இயக்கியுள்ளார். இதில் சோபிதா துலிபல்லா , விஸ்வதேவ் ரச்சகொண்டா , சைதன்யா கிருஷ்ணா மற்றும் ஈஷா சாவ்லா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓடிடியில் இப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.
- மகளிர் மலர் குழு
