சித்தராமையாவை குறிவைத்து ரகசிய வீடியோ பதிவு விவகாரம்: ‘இந்த குமாரசாமியை யாராலும் தொட முடியாது’;கர்நாடக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் எச்சரிக்கை
பெங்களூரு: காங்கிரஸ் மூத்த தலைவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ரகசிய வீடியோ விவகாரத்தில் என்னை ஒருபோதும் யாராலும் தொட முடியாது என்று ஒன்றிய அமைச்சர் எச்.டி.குமாரசாமி கர்நாடக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரை குறிவைத்து ரகசிய கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்ட விவகாரம், அம்மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இந்த ரகசிய திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும் ஒன்றிய அமைச்சருமான எச்.டி.குமாரசாமியின் அரசு இல்லத்தில் அவரது உதவியாளரான பிரஜ்வல் பிரசாத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, இதுதொடர்பாக ரித்தேஷ் பாண்டே என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தன் மீதான இந்த குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து மாநில அரசுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ள ஒன்றிய எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி, ‘தனது பதவியை தக்கவைக்க போலீஸ் கமிஷனர் தலைமை எழுத்தர் போல செயல்பட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக உண்மைகளை மறைக்கிறார்; அரசியல் பழிவாங்கும் நோக்கில் புனையப்பட்ட இந்த வழக்கின் உண்மை நிலவரத்தை தகுந்த ஆதாரங்களுடன் மிக விரைவில் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவேன்; இந்த அரசும், முதல்வரும், அதிகாரிகளும் நினைத்தாலும் இந்த குமாரசாமியை ஒருபோதும் யாராலும் தொட முடியாது, என்னை கண்டாலே அவர்களுக்கு பயம்’ என்றார்.


