Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் அருகே பண்ணை வயலில் யூடியூபர் பெலிக்ஸ் தங்குவதற்கு கன்டெய்னரில் சொகுசு வசதிகள்: போலீசார் பார்த்து பிரமிப்பு

மன்னார்குடி: பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த யூ டியூபர் சங்கர், கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தேனியில் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் சங்கர் பேசிய நேர்காணலை ஒளிபரப்பிய யூ டியூப் சேனலின் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி தனிப்படை போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பெலிக்ஸ் ஜெரால்டின் வீடு, அலுவலகத்தில் திருச்சி போலீசார் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

பெலிக்ஸ் ஜெரால்டு தொடர்புடைய பல்வேறு இடங்களில் நீதிமன்ற உத்தரவின்படி, போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பெலிக்ஸ் ஜெரால்டின் சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் அடுத்த தேவதானம். இங்கு பண்ணை வீடு கட்டுவதற்காக கடந்த 5 வருடங்களுக்கு முன் திருராமேஸ்வரம் அடுத்த கோட்டகச்சேரியில் 5 ஏக்கர் நிலத்தை மனைவி பெயரில் வாங்கினார். பண்ணைக்கு வரும்போது தங்குவதற்கு ஏசி அறை, கழிவறை என வீடு போன்று அனைத்து வசதிகளுடன் கன்டெய்னரை நிறுத்தியுள்ளார். கிராமத்துக்கு வரும்போது பெலிக்ஸ், அவரது குடும்பத்தினர் கன்டெய்னரில் தங்குவார்களாம். இந்த கன்டெய்னரில் உள்ள அறையில் திருச்சி துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்றிரவு சோதனை நடத்தினர். ஆனால் எதுவும் சிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த சோதனையின்போது, பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி ஜேன் மற்றும் அவரது வழக்கறிஞர்கள் இருந்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் கூறும்போது, ‘’அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள இந்த பண்ணை வயலில் நிறுத்தப்பட்டுள்ள கன்டெய்னருக்குள் பாத்ரூம், டேபிள், சேர், கட்டில், பெட், இணையதள வசதி, 2 ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சொகுசு பங்களா போல் அமைக்கப்பட்டுள்ளது. சமைத்து சாப்பிட காஸ் அடுப்பு, சிலிண்டர் இருந்தது. மின்சாரத்துக்கு கன்டெய்னர் மேல் பகுதியில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணை இடத்தின் மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும். ஜெனரேட்டரும் இருந்தது. அங்கு சுமார் அரை மணி நேரம் சோதனையிட்டோம். ஆனால் எதுவும் சிக்கவில்லை’ என்றார்.

டிஎஸ்பியிடம் பெலிக்ஸ் மனைவி வாக்குவாதம்

சோதனையின்போது பாதுகாப்புக்கு சென்ற திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டனிடம் பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி ஜேன், ‘’இந்த இடம் என் பெயரில் உள்ளது. இங்கு சோதனையிடக்கூடாது’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘’நீதிமன்ற ஆணையின்படிதான் சோதனை நடக்கிறது’’ என அந்த ஆணையின் நகலை டிஎஸ்பி காட்டினார். இதன்பின் ஜேன் அமைதியானார்.