மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: பேட்டர்களுக்கான ஐசிசியின் தரவரிசையில் 2ம் இடம் பிடித்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா!
துபாய்: லண்டன்: ஐசிசி மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 2ம் இடம் பிடித்துள்ளார். அயர்லாந்து அணிக்குஎதிரான ஒரு நாள் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஸ்மிருதி.
முதல் போட்டியில் 41 ரன்களையும், 2வது போட்டியில் 73 ரன்களையும், 3வது ஒரு நாள் போட்டியில் 135 ரன்களையும் குவித்தார். இதனால் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தர வரிசைப் பட்டியலில், 738 புள்ளிகள் பெற்று, ஸ்மிருதி மந்தனா 2ம் இடத்திற்கு முன்னேறினார்.
இலங்கை வீராங்கனை சமாரி அத்தப்பட்டு, 733 புள்ளிகள் பெற்று 3ம் இடம் பிடித்துள்ளார். இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், தரவரிசை பட்டியலில் 17வது இடத்திலும் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 15ம் இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள ஒரே இந்திய வீராங்கனை மந்தனா ஆவார். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா, 344 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளார்.பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை தீப்தி 680 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளார்.
