Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்ற வழக்கு வரும் 16ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: பாமகவினர் மத்தியில் பரபரப்பு

திண்டிவனம்: அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொல்ல முயன்ற வழக்கின் தீர்ப்பை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த 2010ம் ஆண்டில் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் அமர்ந்து கட்சியினருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆயுதங்களுடன் வந்த கும்பல் சி.வி.சண்முகத்தை தாக்கி கொல்ல முயற்சி செய்தது. அப்போது காருக்கு அடியில் புகுந்து அதிர்ஷ்டவசமாக சி.வி.சண்முகம் உயிர் தப்பினார். இச்சம்பவத்தின்போது சி.வி.சண்முகத்தை கொலை செய்யவிடாமல் தடுத்த அதிமுக தொண்டர் முருகானந்தம் என்பவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் இக்கொலை முயற்சி வழக்கு தொடர்பாக 20 பேர் மீது ரோஷணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி 2011ம் ஆண்டில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, 21.11.2014ம் ஆண்டில் திண்டிவனம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் பாமகவினர் 20 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வழக்கு நடந்த காலகட்டத்தில் 5 பேர் இறந்து விட்டனர். மீதமுள்ள 15 பேர் மீது நீதிமன்ற விசாரணை நடைபெற்று வந்தது. 2025 ஏப்ரல் 28ம் தேதி வழக்கு விசாரணை நிறைவடைந்தது. ஜூன் 12ம் தேதி (நேற்று) தீர்ப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகம்மது பாரூக், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3வது நபர் மீது கூடுதல் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றவரைவுகளில் இணைப்பதாகவும், இதுகுறித்து அவரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவரிடம் எடுத்துரைத்து அடுத்து வரும் வழக்கு விசாரணை தேதியில் வாதிடலாம் எனக்கூறி இவ்வழக்கின் விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பாமக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் 2010ம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கில் பாமகவினர் 15 பேர் மீது வருகிற 16ம்தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் பாமகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.