Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளுக்கு வைகோ கண்டனம்: திரும்பப் பெற வலியுறுத்தல்

சென்னை: வங்கிகளில் நகைக்கடன் பெறுவதற்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிகைக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் அவசரகால பண தேவைக்கு வங்கிகளில் நகைக் கடன் பெறுவது இன்றியமையாதது. ஏழை எளிய மக்கள் மற்றும் வேளாண் தொழில் செய்யும் உழவர்கள் தங்கள் தேவைக்கு நகைக் கடனையே பெரிதும் நம்பியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் நகைகளை அடகு வைத்தால், அதிக வட்டி செலுத்த வேண்டி வரும். இதனால் பலரும் வங்கிகளில் நகைக் கடன் பெறுகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறை வட்டி கட்டி திருப்பி கொள்ளலாம் என்ற விதிகள் உள்ளதால் பலரும் வங்கிகளில் நகைக் கடன் பெற விரும்புகின்றனர். இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் வங்கியில் நகைக் கடன் வாங்குபவர்களில் பலர் தற்போது ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

நகைக் கடன் பெற்றவர்கள் மறுஅடகு வைப்பதில் கடுமையான நிபந்தனைகளைகளுடன் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையின்படி, வங்கியில் அடகு வைத்துள்ள நகைகளை முழுவதும் பணம் செலுத்தி திருப்பி, மறுநாள் தான் மீண்டும் அடகு வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி மட்டும் கட்டி அதே தினத்தில் மறுஅடகு வைக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியவர்கள் முழு பணத்தையும் புரட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், நகைகளை திருப்பிய மறுநாள் தான் மீண்டும் நகைகளை மறுஈடு வைத்து பணம் பெற முடியும். ரிசர்வ் வங்கியின் இந்த விதிகள் ஏழை எளிய மக்களுக்கும் குறிப்பாக சிறு குறு விவசாயிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு அதிக பாதிப்புகளையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.

வட்டி செலுத்துவதன் மூலம் நகைகளை மீண்டும் அடகு வைக்கும் வாய்ப்பு மக்களுக்கு அதிக பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது நகை கடனுக்கான அசல் வட்டி முழுவதையும் செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் வங்கிகளின் நகைக் கடனை நம்பி உள்ளோர் கந்து வட்டி கொடுமைக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கூடுதல் நிதியைப் பெறுவதற்கு முன்பு, முழு கடன் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டிய சுமை அதிகமாக இருக்கும். இந்த மாற்றம் நிதி ஆதாரங்களை கடுமையாக பாதிப்பது மட்டும் இல்லாமல், முறைசாரா கடன் அல்லது தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை உருவாக்கும்.

மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் வழங்கும் சூழலை வளர்ப்பதே இந்த புதிய வழிகாட்டுதல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. இருப்பினும், இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவது மருத்துவத் தேவை, கல்விச் செலவுகள் போன்ற அவசர தேவைகளுக்கு விரைவான பண ஆதாரமாக, நகைக் கடன்களை பெரிதும் நம்பியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தவிக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது.

எனவே மத்திய நிதித்துறை அமைச்சகம் இதில் தலையிட்டு பொதுமக்கள் நகைக் கடன் பெறுவதற்கு புதிய வழிகாட்டுதல் உத்தரவை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகளையே வங்கிகள் பின்பற்ற வழி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.