Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

2,327 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இளங்கலை, முதுநிலை பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பம்: விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2‘‘ஏ” பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் அடங்கும்.

குரூப் 2ஏ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2, 2ஏ தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்ட அன்றே இணையதளம்(www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஏதாவது இளங்கலை படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இத்தேர்வுக்கு இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயர் என்று போட்டு போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாள் ஆகும். இதனால், லட்சக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022ம் ஆண்டில் காலியாக உள்ள குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த முறை குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குரூப் 2 பதவிக்கு நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கும் தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கு முன்பு இந்த 2 பதவிகளுக்கு ஒரே மாதிரியாக முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. நேர்முக தேர்வு ரத்து உள்பட பல்வேறு அதிரடி மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளதால், தற்போது அறிவிக்கப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்போர் பல லட்சங்களை தாண்ட வாய்ப்புள்ளது. இப்பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.