வாஷிங்டன்: ஈரானுடன் வர்த்தகம் செய்ததால் 6 இந்திய நிறுவனங்கள் உள்பட 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மோதலைத் தூண்டவும், பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும், உள்நாட்டு மக்களை ஒடுக்கும் வேலைகளில் ஈரான் அரசு ஈடுபடுகிறது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அந்த நாட்டின் வருவாயை இந்த கொடூர செயலுக்கு பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து கூறுகிறது.
இதனால், அந்த நாட்டுடன் வர்த்தகத்தில் ஈடுபட அனைத்து நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஆனால், பல நிறுவனங்கள் பெட்ரோலியம் தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், தடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்ட 6 இந்திய நிறுவனங்கள் உள்பட 20 நிறுவனங்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று தடைவிதித்து உள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,‘20 நிறுவனங்கள் ஈரானுடன் தடையை மீறி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இதில், 6 இந்திய நிறுவனங்கள் அடக்கம். அந்த நிறுவனங்கள் ஈரானில் இருந்து பெட்ரோலியம், பெட்ரோலிய பொருட்கள் அல்லது பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன.
இதனால், அந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது,’என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி, அல்கெமிக்கல் சொல்யூஸ்ஷன், குளோபல் இண்டஸ்டிரியல் கெமிக்கல், ஜூப்பிடர் டை கெமிக்கல், ராம் நிக்கல் கோசலியா கம்பெனி மற்றும் காஞ்சன்ஸ் பாலிமர் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அமெரிக்காவில் இனி வணிகம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
