Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு; மதத்தை வைத்து இந்தியாவை பிளவுபடுத்த பாஜக முயற்சி: செல்வப் பெருந்தகை காட்டம்

காட்டுமன்னார்கோவில்: தமிழகத்தை தொடர்ந்து ஒன்றிய பாஜ அரசு வஞ்சித்து வரும் நிலையில், மதத்தை வைத்து இந்தியாவை பாஜக பிளவுபடுத்த முயற்சி செய்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எல்.இளையபெருமாளின் 101வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் காட்டுமன்னார்கோவில் எல்இபி சிலை அருகே நேற்று நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் மாநில துணை தலைவர் கே.ஐ.மணிரத்தினம் தலைமை வகித்தார். கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என்.வி.செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.மணிமொழி முன்னிலை வகித்தனர்.

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, மாநில பொருளாளர் ரூபி மனோகரன், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் செயலாளர் சி.டி.மெய்யப்பன், கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் டி.செல்வம், அருள் பெத்தையா உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

முன்னதாக, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் அரவிந்தன் மணிரத்தினம், தமிழக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் கமல் மணிரத்தினம் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். கூட்டத்தை தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தேசம் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. ஆங்கிலம் பேசக்கூடாது என்று ஒன்றிய அமைச்சர் சொல்கிறார் என்றால் இந்த திமிர் எங்கிருந்து வந்தது. ஆங்கிலம் பேசக்கூடாது என்றால் ஒன்றிய அமைச்சர்களின் குழந்தைகள் அவர்கள் வீட்டின் பெண்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு வெளிநாடுகளிலே ஆங்கில பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். அப்படி என்றால் விளிம்பு நிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளக் கூடாது என்கிற நிலையில் ஒரு ஆட்சி நடந்து வருகிறது.

இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய வரி செலுத்தும் மாநிலம் தமிழகம். இந்தியாவிலேயே மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முதலிடத்தில் இருப்பதும் தமிழகம்தான். இப்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழகம் வழிகாட்டி வருகிறது. ஆனால் ஒன்றிய பாஜ அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது. தமிழகத்தை குறிவைத்து தாக்குகிறது. இப்போது முருகனை ஹைஜாக் செய்ய முயல்கிறார்கள். இதனால் முருகனை காப்பாற்ற வேண்டிய சூழல் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாறி மாறி மதத்தை வைத்து இந்தியாவை பிளவுபடுத்த முயற்சி செய்து வருகிறார்கள். இப்போது நமது ஒரே எதிரி பாஜகவை வீழ்த்துவது தான். இந்த தேசத்தை பாதுகாக்க வேண்டும்.

தமிழகத்திலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும். எங்கள் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.