Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2025-26ல் புதிய பாடத்திட்டத்துடன் சிபிஎஸ்இ பள்ளிகளில் நாடு முழுவதும் 8ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம்: ஒன்றிய இடைநிலை கல்வி வாரியம் சுற்றறிக்கை

வேலூர்: சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 2025-26ம் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்துடன் 8ம் வகுப்பு வரை மும்மொழி கற்பது கட்டாயம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளி நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளது. ஒன்றிய அரசின் மத்திய இடைநிலை கல்வி வாரியம் 2025-2026ம் கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் என்று அறிவித்துள்ளது. அதேபோல் 8ம் வகுப்பு வரை மும்மொழி கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘பாடத்தேர்வுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள், மதிப்பீட்டு முறைகள் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்புதிய பாடத்திட்டம் 2025-2026ம் கல்வி ஆண்டு முதலே சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் புதிய பாடத்திட்டத்தில், இந்தி, ஆங்கிலம் உள்ளடக்கிய நாட்டில் உள்ள 38 மொழிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருப்பதுடன், 8ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மூன்று மொழிகளை கற்பிக்க வேண்டும். அவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளை கற்றிருக்க வேண்டும். மூன்றாவது மொழியாக தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள், 8ம் வகுப்பில் அம்மொழியில் தேர்ச்சி பெறாத நிலையில், 9ம் வகுப்பில் அதே மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெற வேணடும். 9ம் வகுப்பிலும் அவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அம்மாணவர்கள் எழுத முடியாது. 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளில், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டாயமாக தேர்வு செய்யப்பட வேண்டும்.

மாணவர்கள் விருப்பப்பட்டால், இரண்டு மொழிகளையும் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலூரை சேர்ந்த சி.பி.எஸ்.இ பள்ளிகள் தரப்பில் கேட்டபோது, ‘மூன்று மொழிகளை 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்று இருந்தாலும், கடந்த கல்வி ஆண்டு வரை தமிழகத்தில் பல சி.பி.எஸ்.இ பள்ளிகள் அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. அவர்கள் ஆங்கிலம், இந்தியை மட்டும் கற்பித்து வந்தனர். தற்போது மும்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அதை கற்றே ஆக வேண்டும் என்ற நிலையும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது’ என்றனர்.