Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு

ஊட்டி: ‘பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 4 நாள் பயணமாக கடந்த 27ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

பின்னர், ஊட்டி உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கிய அவர் 28ம் தேதி கார் மூலம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள டிஎஸ்எஸ்சி எனப்படும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு சென்று அங்கு பயிற்சி அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். நேற்று மாலை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர், கோத்தர் உள்ளிட்ட 6 வகை பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பண்டைய பழங்குடியினர் நலச்சங்க தலைவர் ஆல்வாஸ் மற்றும் பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள் தங்களின் பொருளாதார நிலை மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி திரவுதி முர்மு பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டிக்கு முதல்முறையாக இப்போது தான் வந்துள்ளேன். நான் நிறைய இடங்களுக்கு செல்லும் போது அங்கு பழங்குடியின மக்களை சந்திப்பேன். நானே ஒரு பழங்குடியாக இருப்பதால், பழங்குடியின மக்களின் பிரச்னைகள் என்னென்ன என்று எனக்கு நன்றாக தெரியும். கல்வி, சமூக பொருளாதார நிலைகளில் பழங்குடியினரின் நிலை பரிதாபகரமான நிலையில் தான் உள்ளனர்.

நான் ஆளுநராக இருந்தபோதும், அதன்பின் ஜனாதிபதி ஆன பின்னரும் நமது பிரதமரிடமும், அரசு அதிகாரிகளிடமும் பழங்குடியினரின் நிலை குறித்து எடுத்து கூறி கல்வி, சமூக நிலை, ஆரோக்கியம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கான தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

* புயலால் திருவாரூர் பயணம் ரத்து

திருவாரூரில் இன்று (30ம்தேதி) தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்பதாக இருந்தது. இந்த சூழலில் பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் ஜனாதிபதியின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து இன்று காலை 9.50 மணியளவில் ஊட்டி ராஜ்பவன் வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்கிறார். அதன்பின், ராஜ்பவனில் இருந்து 9.55க்கு புறப்பட்டு 10.10 மணிக்கு ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவை விமானம் நிலையம் செல்கிறார். அங்கிருந்து காலை 11 மணிக்கு டெல்லி செல்கிறார்.