Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு; தேர்வர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு வரவேண்டும்: தாமதமாக வந்தால் அனுமதி கிடையாது

காஞ்சிபுரம்,: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கு காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு அனுமதி சீட்டுடன் வந்து விடவேண்டும். தாமதமாக வந்தால் அனுமதி கிடையாது என கலெக்டர் தேர்வு எழுதுபவர்களுக்கு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I மற்றும் தொகுதி-IA பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தேர்வினை எழுதும் தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள்; விண்ணப்பதாரர்கள், நாளை காலை 8.30 மணிக்கு தேர்வுக்கூடத்திற்கு அனுமதிச்சீட்டுடன் வருகைப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். காலை 9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும், 12.30 மணிக்கு முன்னர் தேர்வறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள், தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும். தவறினால், அவர்கள் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது ஒளி நகலை கொண்டுவர வேண்டும்.

தேர்வர்கள் தேர்வு கூடத்திற்கு உள்ளே செல்போன் மற்றும் மின்னணு கடிகாரம், புளூடூத் போன்ற மின்னணு உபயோகப்பொருட்கள் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள், தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தேர்வு நாளன்று காலை 6 மணி முதல் சிறப்பு பேருந்து வசதிகள், காஞ்சிபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.