Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்ச ரதங்களை சீரமைக்கும் பணி ராட்சத கிரேன் உதவியுடன் நடந்தது: மூன்று மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு, பஞ்ச ரதங்களையும் சீரமைக்கப்படுகிறது. அதையொட்டி, பெரிய தேர் எனப்படும் மகா ரதத்தை கிரேன் உதவியுடன் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, வரும் டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா உற்சவத்தில் நிறைவாக டிசம்பர் 13 ஆம் தேதி மகா தீபம் ஏற்றப்படும். தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளான்று நடைபெறும் பஞ்சரத பவனி (தேர் திருவிழா) மிகவும் பிரசித்தி பெற்றது. அன்று காலை தொடங்கி, நள்ளிரவு வரை மாட வீதியில் பஞ்சரதங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பவனி வருவது தனிச்சிறப்புக்குரியது.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை முன் கூட்டியே சீரமைத்து தயார் நிலையில் வைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதையொட்டி, விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தேர், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றை, சீரமைத்து பழுதுபார்க்கும் பணியை மேற்கொள்ள அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அதையொட்டி, கடந்த மாதம் தேர் சீரமைப்பு பணியில் ஈடுபடும் தேர் ஸ்தபதிகள் மற்றும் பொறியாளர் குழுவினர் நேரடி ஆய்வு நடத்தினர். அப்போது, பஞ்சரதங்களில் என்னென்ன சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து அறநிலை துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அறநிலை துறையின் ஒப்புதலை பெற்று தற்போது பணிகள் தொடங்கி உள்ளது.குறிப்பாக, உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியதான மகா ரதத்தையும், அம்மன் தேரையும் முழுமையாக சீரமைக்கப்பட உள்ளது. தேர் விதானம், சுவாமி பீடம், தேர் சக்கரங்களுக்கு பொருத்தப்பட்டுள்ள ஹைட்ராலிக் பிரேக் மற்றும் தேர் அச்சுகளை ஆகியவற்றை மறு சீரமைப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், மகா ரதம் என அழைக்கப்படும் பெரிய தேர் சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி, ராட்சத கிரேன் உதவியுடன் தேர் சீரமைப்பு பணியில் தேர் ஸ்தபதிகள் ஈடுபட்டனர். அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் அறங்காவலர்கள் தேர் சீரமைப்பு பணியை பார்வையிட்டனர். மகா ரதம் சீரமைப்பு பணியை தொடர்ந்து, அடுத்தடுத்து அம்மன் தேர், சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றையும் சீரமைக்க உள்ளனர். இந்தப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் முதல் வாரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, பொதுப்பணி துறையின் உறுதித் தன்மை சான்று பெற்று, சீரமைக்கப்பட்ட தேர்களை வெள்ளோட்டம் விட திட்டமிடப்பட்டுள்ளது.