Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ்அப்பில் பெறலாம்: ஆந்திராவில் அறிமுகம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் வாட்ஸ் அப் மூலம் பெறலாம் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. ஆந்திராவில் ‘மன மித்ரா’ என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு தலைமையிலான ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை விரிவுபடுத்தி பல்வேறு சேவைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட் முன்பதிவு சேவைகளும் பெற நடவடிக்கை எடுத்து வருகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடர்பான சேவைகள் விரைவில் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். சேவைகளுக்கு நன்கொடைகளை வழங்கலாம். இதேபோல் விஜயவாடாவில் உள்ள துர்காமல்லேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, சிம்ஹாசலம், அன்னவரம், துவாரகா திருமலை போன்ற இந்து அறநிலையத்துறை கோயில்களின் சேவைகளை வாட்ஸ்அப்பில் சேர்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது துர்காமல்லேஸ்வர சுவாமி கோயில் சேவைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சேவைகளைப் பெற, 95523 00009 என்ற அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பின்னர் சேவைகளை தேர்ந்தெடுக்கவும். கோயில் முன்பதிவு சேவைகள், தரிசனங்கள், பூஜைகள், நன்கொடைகள் மற்றும் பிற சேவைகள் பற்றிய தகவல்களை சாட்பாட் மூலம் வழங்குகிறது. வழிமுறைகளை பின்பற்றி விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் ‘கேட்வே’ உடனடியாக தோன்றும். இதில் ரொக்கப்பணம் செலுத்துதல் முடிந்தவுடன், டிக்கெட் செலுத்துபவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். இதன் மூலம் முன்பதிவு விவரங்களைப்பெறலாம்.

பக்தர்கள் இந்த டிக்கெட்டை ‘டவுன்லோடு’ செய்து, பிரின்ட் அவுட் எடுத்துக்கொண்டு அந்தந்த கோயில்களுக்கு செல்லலாம் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசின் அனுமதியுடன், வாட்ஸ்அப்பின் நிர்வாக திட்டமான ‘மன மித்ரா’வில் ரயில் டிக்கெட்டுகளை சேர்க்க அரசு முயற்சிக்கும் என்று முதல்வர் சந்திரபாபுநாயுடு தெரிவித்தார். திரைப்பட டிக்கெட்டுகள் முன்பதிவு, அரசு பஸ்களின் நேரடி ஜி.பி.எஸ். கண்காணிப்பு வசதியும் வாட்ஸ்அப் எண்ணில் சேர்க்கப்படும். இந்த சேவைகள் தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்க உள்ளது. ஸ்மார்ட்போன்களில் குறுஞ்செய்தி அனுப்ப முடியாதவர்களுக்கு குரல் சேவையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.