Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரீலிஸ் எடுக்க தடை; மீறினால் கடும் நடவடிக்கை: தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரீலிஸ் விடியோக்கள் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அதிலும் முக்கிய நாட்கள், விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். அப்படியிருக்கும் போது சிலர் ரீல்ஸ் எடுப்பதற்காகவும், குறும்படங்களை எடுப்பதற்காகவும் ஏழுமலையான் கோயில் முன்னும், மாட வீதிகளிலும் மேலும் சில முக்கிய இடங்களிலும் தங்களின் மொபைல் போனில் ரீல்ஸ் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதை தேவஸ்தானத்திடம் பலர் முறையிட்டனர்.

இந்நிலையில் திருமலையில் ரீல்ஸ் எடுப்பதற்கு தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி யாராவது ரீல்ஸ் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் அறிவித்த அறிவிப்பில் கூறியதாவது; சில தனிநபர்கள், திருமலை கோயில் வளாகத்தில் குறும்புத்தனமான வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் பக்தர்களின் உணர்வுளை புண்படுத்துவதுடன் கோவிலின் புனிதத்தையும் மீறுவதாகும்.

எனவே, 'ரீல்ஸ்'களை பக்தர்கள் கோயில் வளாகத்தில் எடுக்கக் கூடாது. ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வீடியோவாக எடுப்பவர்கள் மீது போலீசார் மற்றும் கோவில் பணியாளர்கள் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுப்பர். எனவே, கோவில் வளாகத்தில் ஆன்மிக சூழலை பேணவும், கோவிலின் புனிதத்தை பாதுகாக்கவும் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.