காஞ்சிபுரம்: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயிலில் இன்று காலை கருட சேவை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக காஞ்சிபுரத்தை அடுத்த திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோயில் விளங்குகிறது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு கடந்த 21ம் தேதி இரவு சேனை முதன்மையார் புறப்பாடு நடைபெற்றது.
தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் சிம்ம வாகனம், கருட சேவை, சேஷ வாகனம், நாச்சியார் கோலம், சந்திரபிரபை, யாளி வாகனங்களில் வீதி உலா வந்து அருள் பாலித்து வருகிறார். 3ம் நாளான இன்று காலை விஜயராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
