Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சூறைக்காற்றின் சீற்றம் குறைந்ததால் பாம்பன், மண்டபம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகம் குறைந்து தடை நீங்கியதால் பாம்பன், மண்டபம் மீனவர்கள் 250 விசைப்படகுகளில் இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனர். இதனால், 2 மாதங்களுக்கு பிறகு செல்வதால் அதிக மீன்பாடு கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக கடல் பகுதியில் அமலில் இருந்த 2 மாத மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தீவு, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் இரண்டு நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டன.

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடலில் காற்றின் வேகம் தற்போது குறைந்துள்ளதால், பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து பாம்பன் தெற்குவாடி விசைப்படகு மீனவர்கள் டீசல், ஐஸ் கட்டிகளை நேற்று படகுகளில் ஏற்றினர். இவர்கள் இன்று அதிகாலை 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்கள் நாளை காலை கரை திரும்புவர்.

இதேபோல, மண்டபம் தெற்குவாடி கடலோரப் பகுதிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 700 மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க உற்சாகத்துடன் புறப்பட்டு சென்றனர். 2 மாதங்களுக்கு பிறகு கடலுக்கு செல்வதால் மீன் வகைகளை அதிகளவில் பிடித்து வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீனவர்கள் சென்றுள்ளனர். இதேபோல, மண்டபம் வடகடல் பகுதிக்கு நாளை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல உள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கின்றனர்.