Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சோழவந்தானில் சமூக விரோதிகளின் கூடாரமான கோயில் வணிக வளாகம்: பொதுமக்கள், பக்தர்கள் வேதனை

சோழவந்தான்: சோழவந்தானில் பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோயில் வணிக வளாகம் உரிய பாதுகாப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதால் பக்தர்கள், பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தானில் மார்க்கெட் அருகே பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் உள்ளது. கள்ளழகர் திருக்கோயிலின் உப கோயிலான இக்கோயில் அருகே சில வருடங்களுக்கு முன் வணிக வளாகம் கட்டப்பட்டது. கீழ் தளத்தில் 6 கடைகளுடனும், மேல் தளத்தில் 6 கடைகளுடனும் அமைந்துள்ள இந்த வளாகத்தின் கீழ் தளத்தில் 3 கடைகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது. மற்ற அனைத்து கடைகளும் பூட்டியே கிடப்பதால் அப்பகுதி முழுவதும் சுகாதாரம் இன்றியும், குடிமகன்களின் கூடாரமாகவும் உள்ளது.

இதேபோல், 5 கடைகளுடன் கட்டப்பட்ட, அருகில் உள்ள மற்றொரு வணிக வளாகத்தில் ஒரு கடை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. பொதுவாக இங்குள்ள கடைகள் அனைத்தும், வாடகை கூடுதலாக இருப்பதால் இதை யாரும் கேட்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட வணிக வளாகம் பயனற்று கிடக்கிறது. மாடிக்கு செல்லும் வழியில் கதவு இல்லாததால் மேலே செல்லும் குடிமகன்கள் பாராகவும், பல இடங்களை சிறுநீர் கழிப்பிடமாகவும் மாற்றி விட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் ‘இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு ரூ.8 ஆயிரம் வாடகை, 20 மாத வாடகையை முன் பணமாகவும் கோயில் நிர்வாகத்தினர் கட்ட சொல்கின்றனர். இதே ஊரில் உள்ள மற்ற கோயில்களுக்குரிய கடைகள் குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.

அதிக வாடகை கேட்பதால் இந்த கடைகளை எடுக்க யாரும் முன் வரவில்லை. மேலும் இந்த வளாகத்தில் மாடிக்கு செல்லும் பாதைக்கு கதவு போடாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. மாடிப்படி அருகே மின்மீட்டர்கள் உள்ளிட்ட மின் சாதனங்கள் குழந்தைகள் தொடும் தூரத்தில் ஆபத்தான நிலையில் உள்ளது. சுகாதாரமற்ற நிலையில் உள்ள இந்த வணிக வளாகத்தை முதலில் தூய்மைப்படுத்தி, படிப்பாதை அருகே கதவு அமைத்து பாதுகாக்க வேண்டும். உரிய வாடகை கட்டணம் நிர்ணயித்து அனைத்து கடைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து வருவாயை கூட்ட வேண்டும். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.