Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நுங்கம்பாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது; டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மதுபானங்கள் கொள்முதல் செய்ததில் உள்ள முரண்பாடுகள் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வீடு உட்பட 12 இடங்களில் 2 நாட்களாக நடந்து வந்த சோதனை நேற்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையில் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் மதுபான தொற்சாலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் வழங்கியது தொடர்பாக அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்பு மதுபான ஆலை நிறுவனங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் இறுதியில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 16ம் தேதி தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வசித்து வரும் சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள வீடு, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வசித்து வரும் ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள வீடு, தனியார் மதுபான நிறுவனத்தின் பிஆர்ஓ மேகநாதன் வசித்து வரும் சூளைமேடு ராஜகீழ் வீதியில் உள்ள வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, தி.நகர் ஆற்காடு சாலையில் உள்ள கேசவன் வீடு, சாஸ்திரி நகர் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு, சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் பாபு வீடு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உள்பட சென்னை முழுவதும் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2 நாட்களுக்கு மேலாக நடந்து வந்த சோதனை நேற்று அதிகாலை 2 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனையில் ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள், போக்குவரத்து டெண்டர் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தனர்.

அதேநேரம் சோதனையின் இடையே டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நுங்கம்பாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.