Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தான் என்ன? அச்சுறுத்தும் இலங்கை மீது ஏன் இந்தியா ராணுவ தாக்குதல் நடத்தக் கூடாது?: செல்வப்பெருந்தகை அதிரடி பேட்டி

சென்னை: தமிழ்நாட்டு மீனவர்கள் நாகை முதல் ராமேஸ்வரம் வரை தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால், இலங்கை கடற்படையோ, தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்வதுடன் படகுகளையும் பறிமுதல் செய்து விடுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தமிழக மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை என்பது தொடர்கதையாகி வருகிறது. அவர்களை கைது செய்வது மட்டுமல்லாமல் அவர்களை கட்டையால் அடித்து துன்புறுத்துவது, பிடிபடும் தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட கொடுஞ் செயல்களில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரைக்கும் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி சுட்டு கொன்றுள்ளனர். இவர்களின் கட்டுக்கடங்காத செயல்களால் தமிழக மீனவர்கள் கடலுக்கு ஒருவித அச்சத்துடனேயே மீன்பிடிக்க வேண்டிய நிலையே தொடர்கிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் செவிடன் காதில் ஊதிய சங்கை போன்று தமிழக மீனவர்கள் மீதான பிரச்னையை ஒன்றிய பாஜ அரசு கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது.

இலங்கை அரசை தட்டி கேட்கும் கடமை இந்திய அரசுக்கு தான் உள்ளது. இந்திய கடல் எல்லைகளை பாதுகாக்க ரோந்து வரும் இந்திய கடற்படை கப்பல்கள் தமிழக மீனவர்களுக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்க மறுக்கிறது என்பது தான் தமிழக மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அண்டை நாடுகளை எல்லாம் அச்சுறுத்தும் இந்திய அரசு, இலங்கை அரசை கண்டிக்க கூட மாட்டேன் என்பது கேள்வி குறியாக உள்ளது. அதுமட்டுமல்ல இந்திய அரசு நினைத்தால் ஒரு மணி நேரத்தில் இலங்கையை அடியோடு அழித்து விடக்கூடிய அளவுக்கு பலம் பொருந்தியது. ஆனால், தமிழக மீனவர் பிரச்னையில் இலங்கை அரசுக்கு, இந்திய அரசு பயந்து போகிறதா? அல்லது தமிழர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறதா? என்ற கேள்வி கனைகள் தமிழகம் மீனவர்கள் மத்தியில் தற்போது வலம் வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

இலங்கையின் கடற்படை மற்றும் ராணுவமும் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டு மீனவர்களை அச்சுறுத்தி தாக்குகிறார்கள், வலைகைள சேதப்படுத்தி கைது செய்கின்றனர். அவ்வாறு கைது செய்தவர்களை கொடுமைப்படுத்தி நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வழங்குகின்றனர். ஆனால் 2014ம் ஆண்டு ஒன்றிய அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தாமரை மாநாடு என்று ராமேஸ்வரத்தில் நடத்தினர். அந்த மாநாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட சுடப்படமாட்டார். மீனவர்களுக்கு என தனியாக அமைச்சகம் அமைக்கப்படும் என்றார்.

அதேபோன்று, இந்திய கப்பற்படையின் கப்பல் சர்வதே எல்லையில் நிறுத்தப்படும். ஒரு மீனவரும் தாக்கப்பட மாட்டார். அதிலும் தமிழ்நாட்டு மீனவர்களை சிறைப்பிடிக்க நாங்கள் அனுமதி வழங்கமாட்டோம் என்றெல்லாம் பேசினார்கள். இவ்வாறு பேசிவிட்டு, கடந்த 11 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொடூர தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர். இதுவரை ஒரு துரும்பை கூட பாஜக அரசு எடுத்து போடவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என ஏன் எச்சரிக்கவில்லை?

ஆனால் பாகிஸ்தான் மீது படையெடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். காஷ்மீர் சம்பவம் தொடர்பாக, ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் சர்வதேச எல்லையில் காங்கிரஸ் பேரியக்கம் துணை நிற்கும் என எங்கள் தலைவர்கள் சொல்லி இருக்கிறார். அதேநேரத்தில் நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்த கொடூர செயல்களை செய்யும் இலங்கை அரசை எதிர்த்து ஏன் குரல் கொடுக்காமல் மவுனமாக இருக்கிறார்கள். இஸ்லாமிய நாட்டிற்கு எதிராக வீர வசனம் பேசும் போது ஏன் இலங்கைக்கு எதிராக பேச மறுகிறார்கள். சிங்களவர்கள் என்றால் இனிக்கிறது இஸ்லாமியர்கள் என்றால் கசக்கிறதா?

பாகிஸ்தான் மீது ஒரு அளவுகோல், இலங்கை மீது ஒரு அளவுகோல் இருக்க முடியாது. இலங்கையிலும் எல்லை தாண்டி பயங்கரவாதங்கள் நடக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருக்கிறார்கள். ராட்சத அலைகள் ஏற்படும்போது படகுகள் எல்லையை தாண்டி சென்று விடுவது இயற்கை. உடனே வலையை கிழிப்பது, தாக்குவது, படகு சேதாரம், சிறை என்றால் எப்படி பொறுத்துகொள்ள முடியும்.

எனவே மோடி அரசை கண்டிக்கின்றோம். இலங்கை அரசிடம் பேச வேண்டும் அல்லது இலங்கை அரசை பேச வைக்க வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். காஷ்மீர் சம்பவத்துக்கு எவ்வாறு குரல் கொடுக்கிறார்களோ? அதேபோன்று தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கும் பிரதமர் மோடி குரல் கொடுப்பாரா? இவ்வாறு அவர் கூறினார்.