Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டுக்காக போராடி வெல்வோம்: பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ செய்தி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பதாவது: பொதுவாக, நான் பிறந்தநாளை பெரிய அளவில் ஆடம்பரமாக - ஆர்ப்பாட்ட விழாவாக கொண்டாடுவது இல்லை. ஆனால், திமுகவினர் மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கழக அரசின் சாதனைகள் மற்றும் கழக கொள்கைகளை எடுத்து சொல்லும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது என்று செயல்படுவார்கள்.

இந்த முறை, என்னுடைய பிறந்தநாள் வேண்டுகோளாக, உங்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். இன்றைக்கு தமிழ்நாடு தன்னுடைய உயிர் பிரச்னையான மொழிப்போரையும் - தன்னுடைய உரிமை பிரச்னையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இதனுடைய உண்மையான நோக்கத்தை நீங்கள், மக்களிடம் கொண்டு சேர்க்கக் கேட்டு கொள்கிறேன்.

மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது மாநிலத்தின் சுயமரியாதை, சமூகநீதி, நம்முடைய சமூக நலத்திட்டங்களைப் பெரிதும் பாதிக்கும். இதை நீங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் மாநிலம் காக்க எழுந்து நிற்க வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்கினோம். இப்போது கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல் வந்துள்ளது. இதை பார்த்த ஒன்றிய அரசு, இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால், நமக்கான நிதியையும் இன்னும் தரவில்லை.

அதேபோல், “தமிழ்நாட்டுக்கான தொகுதிகளை குறைக்க மாட்டோம்” என்று மட்டும்தான் சொல்கிறார்களே தவிர, மற்ற மாநிலங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என்று சொல்லவில்லை. நாம் கேட்பது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள்தொகையை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களை தண்டிக்காதீர்கள். அப்படி நடந்தால், அதை தமிழ்நாடும் தி.மு.க.,வும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாம் ஒரு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும், யாருக்காகவும் - எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம். தமிழ்நாட்டுக்காக நாம் ஒன்றுபட்டு போராட வேண்டும். தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.