Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மன அழுத்தம் இருந்தால் பெற்றோரிடம் பேசுங்கள்: மாணவர்களுக்கு தீபிகா படுகோன் அட்வைஸ்

புதுடெல்லி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி மட்டுமே கலந்துரையாடி வந்தார். இம்முறை பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களையும் மாணவர்களுடன் கலந்துரையாடி தங்கள் அனுபவங்களை பகிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தவகையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். நேற்று ஒளிபரப்பப்பட்ட இந்த கலந்துரையாடலில் தீபிகா படுகோன் மாணவர்களிடம் கூறியதாவது: நமது பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொண்டு பலத்தை அதிகரிக்கவும், பலவீனத்தை மாற்றவும் முயற்சி செய்யுங்கள். போட்டியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சியுங்கள். அவர்களை விட வித்தியாசமாக என்ன செய்ய முடியும் என்பதை பாருங்கள். மன அழுத்தம் கண்ணுக்கு புலப்படாது. ஒரு காலத்தில் ஓய்வின்றி உழைத்து கொண்டிருந்தேன். 2014ம் ஆண்டு ஒரு நாள் மயங்கி விழுந்து விட்டேன். அப்போது பெங்களூருவில் இருந்து என்னை பார்க்க மும்பை வந்த எனது அம்மா, ‘நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்து விட்டார்.

எதாவது நடந்ததா? என கேட்டார். ‘எதுவும் இல்லை, அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. எனக்கு இனி வாழ விருப்பமில்லை’ என்றேன். உடனே எனது அம்மா, ஒரு மனநல மருத்துவரை அழைக்க முடிவு செய்தார். அப்போது நான் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன். மனநலம் என்பது நம் நாட்டில் ஒரு களங்கமாக இருந்தது. இந்த நோயை பற்றி பேச ஆரம்பித்தவுடன், நான் மிகவும் சுதந்திரமாகவும், லேசாகவும் உணர ஆரம்பித்தேன். அங்கிருந்து, மனநல விழிப்புணர்வை நோக்கிய எனது பயணம் தொடங்கியது. மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் யாருக்கும், எந்த நேரத்திலும் ஏற்படலாம். எனவே உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் தேர்வுக்கு முன்தினம் இரவு உங்கள் பெற்றோரிடம் பேசுங்கள். அதற்கான காரணத்தை கண்டறியுங்கள்.

அதை நம்பிக்கையான ஒருவரிடம் தெரிவியுங்கள். பிரதமர் மோடி தனது ‘தேர்வு வீரர்கள்’ புத்தகத்தில் கூறியிருப்பது போல, நீங்கள் தேர்வுக்காக தயாராகும்போது சிறப்பாக உணர தொடங்குவீர்கள். ஒரு மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். தூக்கம் மிகவும் முக்கியமானது. அது இலவசமாக கிடைக்கும் ஒரு வலிமை. வெளியே சென்று போதுமான சூரிய ஒளி, புதிய காற்றை பெற வேண்டும். திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை நான் ஒரு குறிப்பிட்ட முறையில் செய்திருந்தால், அடுத்த முறை நான் அதை எப்படி வித்தியாசமாக செய்வது, சிறப்பாக செய்வது என திட்டமிடுவேன். அதைப்போல நீங்களும் உங்களுக்கு சவால் விட்டு செயல்படுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.