டெல்லி: வழக்கு பதிவு செய்து, அந்த வழக்கிற்கு சம்பந்தப்பட்ட நபரை பிடித்த பின் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நடுவர் (Magistrate) முன் ஆஜர்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கில் தொடர்புடையவரை 24 மணிநேர வரம்பைத் தாண்டி காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் (அதாவது போலீஸ் காவலில்), வைத்திருக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
இதன் மூலம் ஒரு வழக்கில் போலீஸ் தனது காவாலில் எடுக்கும் ஒரு நபரை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்ற நடுவர் (Judicial Magistrate) முன் ஆஜர்படுத்த வேண்டும் என்ற கால அவகாசம், காவல்துறை முறைப்படி கைதை பதிவு செய்யும் போது அல்ல, மாறாக அந்த நபர் காவலில் எடுக்கப்பட்ட (Detention) கணத்திலிருந்தே தொடங்குகிறது என்பதை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொடர்பான வழக்கில் ஒரு நபரை விசாரணைக்காகத் தடுத்து வைப்பதற்கும், முறைப்படி கைது செய்வதற்கும் இடையே செயற்கையான வேறுபாட்டைக் காட்டி காலம் கடத்தக் கூடாது. இது அரசியலமைப்பின் 22(2) பிரிவு மற்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப்பிரிவு 56-ஐ மீறும் செயலாகும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
24 மணி நேரத்திற்கு மேலாக ஒருவரைத் தன் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்றால், காவல் துறையினர் கண்டிப்பாக நீதிமன்ற நடுவரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாத பட்சத்தில், அது சட்டவிரோதக் காவலாகக் கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


