Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோடை சீசனில் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 லட்சம் குறைந்தது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி, வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி, மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.இது தவிர, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, புகைப்பட கண்காட்சி, கோடை விழா கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் நடத்தப்படுகிறது.பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காணவே அதிகம் வருகின்றனர். இம்முறை கடந்த மாதம் 15ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை மலர் கண்காட்சி நடந்தது. மலர் கண்காட்சி நடந்த 11 நாட்களில் 1.84 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். மேலும் அனைத்து கண்காட்சிகளும் நடந்து முடிவடைந்துள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நீலகிரிக்கு மொத்தம் 7 லட்சத்து 3 ஆயிரத்து 362 பேர் வந்திருந்தனர். ஆனால் நீலகிரிக்கு இம்முறை கடந்த இரு மாதங்கள் (நேற்று முன்தினம் வரை) 6 லட்சத்து 6 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்திருந்தனர். கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை கடந்த இரு மாதங்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதற்கு காரணம் நீலகிரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ-பாஸ் முறையை அறிமுகம் செய்தது தான். மேலும் கடந்த 26ம் தேதி முதல் மழை பெய்த நிலையிலும், ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்தது. இதனால், இம்முறை ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது.