Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென் மேற்கு பருவமழை பாதிப்புகளை தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: உயிரிழப்பு, பொருள் சேதம் எதுவும் இல்லாமல் எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தை கடந்து செல்ல அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தள கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை ஆயத்தநிலை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில், தலைமை செயலாளர் முருகானந்தம் வரவேற்புரை ஆற்றினார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இப்போது, நாம் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள இருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

என்னதான் நிலத்தடி நீர்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை உள்ளிட்டவற்றுக்கு இந்த மழை துணையாக இருந்தாலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீர் வெள்ளம், நீலகிரி மலை பகுதிகளில் ஏற்படுகிற நிலச்சரிவு போன்ற பாதிப்புகளையும் இதனால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை காலத்தை திறம்பட எதிர்கொள்ள, அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும், மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுவதையும், தகவல் தொடர்பு சாதனங்களின் பயன்பாட்டையும், மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் தயார் நிலையையும் உறுதி செய்திட வேண்டும்.

வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடந்து, நாம் ப்ரோ-ஆக்டிவாக செயல்பட்டால் பேரிடர் காலங்களில் ஏற்படுகின்ற பல பாதிப்புகளை தவிர்க்கலாம். அதற்காக நான் சில ஆலோசனைகளை சொல்ல விரும்புகிறேன். பேரிடர் காலங்களில் மக்கள் தங்களுக்கு தேவையானவற்றை கேட்டும், தங்களுடைய குறைகளை சொல்லியும் குரல் எழுப்புவது ஊடகங்களிலேயும், சமூக வலைதளங்களிலேயும்தான். எனவே, சோஷியல் மீடியாக்களில், செய்திகளில் வருகிற புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். . குறைகளை சொல்கின்ற மக்களிடையேயும், உதவி கேட்கின்ற மக்களிடையேயும் கனிவாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் நம்மை நம்பிதான் உதவி கேட்கின்றார்கள் என்ற பொறுப்போடு நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

*பேரிடர் காலங்களில் ஏற்படுகிற திடீர் மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மற்றும் மின் பராமரிப்பு பணிகள் குறித்த தகவல்கள் நுகர்வோருடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்கள் பகுதியில் எப்போது மறுபடியும் மின்சாரம் வரும் என்று சேர்த்தே மெசேஜ் அனுப்ப வேண்டும்.

*எதிர்வரும் தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்பு சேதம் எதுவும் இல்லாமல், நல்ல முறையில் பருவமழை காலத்தை கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தலைமை செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல் துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்க போதுமான நீர் உள்ளது

நீர்வள ஆதாரத் துறையை பொறுத்தவரைக்கும் 17.05.2025 தேதி நிலவரப்படி, மேட்டூர் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டி.எம்.சி தண்ணீர் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதற்கு போதுமான நீர் இருக்கிறது. காவிரியின் கிளையாறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றை தூர்வாரி, கடைமடைக்கும் தண்ணீர் கொண்டு சென்று, குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேளாண்மை-உழவர் நலத்துறையை பொறுத்தவரையில், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து கார், குறுவை, சொர்ணவாரி பருவங்களில் பயிர் சாகுபடி மேற்கொள்ள பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கின்றன. எனவே, தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே, கடைமடை பகுதிக்கும் தண்ணீர் சென்று கிடைப்பதற்கு ஏதுவாக கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டார்.