Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மகன் அஸ்வத்தாமனின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியதால் ஆம்ஸ்ட்ராங் கொலை சதி திட்டத்தை சிறையிலிருந்து தீட்டிய நாகேந்திரன்: 5000 பக்க குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல்கள்; தனித்தனியாக பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்தது எப்படி?

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் பல அதிர்ச்சி தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையை அரங்கேற்றிய முழு விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சென்னையில் ஆட்கள் பலத்தோடு வளர்ச்சி அடைந்ததால் அதனை தடுக்கவே கொலையை செய்ததாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ரவுடியிசத்தில் சென்னையை அடுத்து யார் ஆள போகிறார்கள் என்ற விவகாரத்தில் பல ரவுடிகளுக்கு ஆம்ஸ்ட்ராங் தடையாக இருந்ததால் கூட்டு சேர்ந்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுடன் நில விவகாரம், ரவுடி சம்பவ செந்திலுடன் தலைமைச் செயலக காலனியில் வீடு விவகாரத்தில் 12 லட்சம் மிரட்டி வாங்கிய விவகாரம், ஆற்காடு சுரேஷின் கொலை வழக்கு மற்றும் தென்னரசு கொலை வழக்கு ஆகிய 4 முன்விரோதங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆருத்ரா கோல்டு டிரேடிங் விவகாரம் மோசடி தொடர்பாக எந்தவித முன்விரோதமும் இருப்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஆற்காடு சுரேஷ் மரணத்தின்போது அவரது மனைவியின் சபதத்தால் ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாகவும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து கொலையை அரங்கேற்றி இருப்பதும், சிறையில் உள்ள நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி இருப்பதும், கொலையில் ஈடுபட்ட நபர்கள் பல்வேறு நட்சத்திர விடுதியிலும் கூட்டம் கூட்டி திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 6 மாதமாக ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ரெக்கி ஆபரேஷன் நடத்தி கொலையை அரங்கேற்றியுள்ளனர். கொலைக்கு பண உதவியை ரவுடி சம்பவ செந்தில் கொடுத்திருப்பதாகவும் மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் போடும் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தி இருப்பதையும் தெரிவித்துள்ளனர். கொலையை அரங்கேற்ற மொத்தம் 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தியதாலேயே கண்ணுக்கு தெரியாத மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் விசாரணையிலேயே முக்கிய மூன்று குற்றவாளிகளான நாகேந்திரன், சம்பவ செந்தில் மற்றும் அஸ்வத்தாமன் சிக்கி உள்ளனர். கைதான நபர்கள் மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் என 140 வங்கி கணக்குகளை சோதனை செய்து 73 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் ஒன்றரை கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 80 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்ற பத்திரிகையில் 300க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 5ம் தேதி நடந்த கொடூர கொலைச் சம்பவத்திற்கு 90 நாட்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி விரைந்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை ஆணையர் அருண் நேரி்ல் பாராட்டுகள் தெரிவிக்க உள்ளார். இந்த வழக்கில் தலைமறைவான சம்பவ செந்தில் மற்றும் கூட்டாளி மொட்டை கிருஷ்ணனை பிடிக்க விரைவில் வெளிநாட்டிற்கு போலீசார் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* மொட்டை கிருஷ்ணனின் சொத்து முடக்கம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளி வக்கீல் கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் தனது மனைவியுடன் தலைமறைவாக உள்ளார். அவர் வெளிநாடு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. அவர் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் கொடுங்கையூரில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்குகிறார். அந்த வீட்டை போலீசார் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நடந்த பண பரிவர்த்தனையில் வாங்கப்பட்ட வீடு என வழக்கில் காட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* சம்பவ செந்திலிடமே சம்பவம்

சம்பவ செந்திலின் தந்தை 2002ல் தலைமைச் செயலக காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு இடம் வாங்குகிறார். அங்கு வந்த ஆம்ஸ்ட்ராங் ஆட்கள், இது எங்களது இடம் என பஞ்சாயத்து பேசியுள்ளனர். சம்பவ செந்தில் தனது தந்தைக்காக பஞ்சாயத்து பேச சென்றபோது 20 லட்சம் கொடுத்தால் இடத்தை காலி செய்வோம் என கூறியுள்ளனர். பிறகு 12 லட்சத்தை சம்பவ செந்தில் மற்றும் கல்வெட்டு ரவி ஆம்ஸ்ட்ராங் தரப்பிடம் கொடுத்துள்ளனர். அன்று முதலே சம்பவ செந்தில் -ஆம்ஸ்ட்ராங் இடையே பகை இருந்து வந்துள்ளது. இதை மனதில் வைத்து கொலைக்கு தனது சொந்த பணமான 4 லட்சத்தை செலவிட்டுள்ளார்.

* சிறையிலிருந்து எச்சரித்த நாகேந்திரன்

ஆம்ஸ்ட்ராங் கட்சியின் மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் அழுத்தம் காரணமாகவே வழக்கில் ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து புகைச்சல் இருந்து வந்த நிலையில் நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் மீஞ்சூரில் ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதன்பின்பு நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கலாம் என நாகேந்திரன் காய் நகர்த்தியும் தோல்வி அடைந்துள்ளார்.

அதன் பின்பு ஆம்ஸ்ட்ராங் கட்சியை சேர்ந்த ஆவடி முக்கிய நபர் ஒருவர் நாகேந்திரனை சிறையில் பார்த்தபோது என் மகன் வளர்வது உங்கள் கட்சி தலைவருக்கு பிடிக்கவில்லையா என நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். அண்ணனை உங்களிடம் போனில் பேச வைக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் நாகேந்திரன் இனி அவருடன் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று கூறி அனுப்பி வைத்துள்ளார். திருவள்ளூரில் இட பிரச்னையிலும் அஸ்வத்தாமனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை விட்டால் தனது மகன் வளர முடியாது என்று கருதிய நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.