Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

3 மாதத்தில் ‘ஸ்லீப்பர்’ வசதியுடன் கூடிய வந்தேபாரத் ரயில் சேவை: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

பெங்களூரு: படுக்கை வசதியுடன் கூடிய வந்தேபாரத் மாதிரி ரயிலின் சோதனை ஓட்டத்தை தொடங்கிவைத்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அடுத்த 3 மாதத்தில் ஸ்லீப்பர் கோச் வந்தேபாரத் ரயில்லை பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். பெங்களூவிலுள்ள பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகளுடன் கூடிய மாதிரி ரயிலை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மற்றும் இணை அமைச்சர் சோமண்ணா நேற்று பார்வையிட்டனர்.

அதன் பிறகு 9.2 ஏக்கர் பரப்பில் வந்தேபாரத் ரயில் பெட்டி தயாரிக்கும் புதிய தொழிற்சாலை உள்ளிட்ட பிரிவுகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறியதாவது, ‘வந்தே பாரத் ரயில் சேவையை தொடர்ந்து ஸ்லீப்பர் வசதி கொண்ட ரயில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான பெட்டிகள், பிஇஎம்எல் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் அளவு பெட்டியின் உள்ளே அதிகம் இருக்கும் வகையில் இப்பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட பாதிப்பில் இருந்து பயணிகளை பாதுகாக்கும் வகையில் கூடுதல் தொழில் நுட்பம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் கொண்ட ரயில் தொடர்ச்சியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தி வருகிறோம். இருப்பு பாதையில் பரிசோதனை மேற்கொள்வதற்கு முன்பு தொடர்ந்து 10 நாள் இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படும். வந்தேபாரத் ஸ்லீப்பர் சேவை இன்னும் மூன்று மாதத்திற்குள் பயணிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.

வந்தே பாரத் சேர் கார் சேவையை தொடர்ந்து தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்கும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. ஒட்டுமொத்த பரிசோதனைகள் முடிந்த பிறகு பிஇஎம்எல் தொழிற்சாலையில் மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று வந்தேபாரத் ஸ்லீப்பர் ரயில்கள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பரை தொடர்ந்து வந்தே பாரத் மெட்ரோ, அமித்பாரத் என தொடர்ந்து ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்.

இப்பெட்டிகளின் தொடர்ச்சியான தயாரிப்பு பணிகள் ஒன்றரை ஆண்டுகளில் தொடங்கும். வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பரில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும், ஒரு நாள் இரவில் 800 முதல் 1200 கி.மீ. தூரத்திற்கு பயணிக்கும் வகையில் திறன் கொண்டதாக அமையும். அதேநேரம் இந்த ரயிலில் கட்டணம் சாதாரண மக்களுக்கு ஏற்றதாக இருக்கும். ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கட்டணத்தை போன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் நடுத்தர மக்களுக்கு இந்த ரயில் வரப்பிரசாதமாக அமையும்.

வந்தே பாரத் ரயில்களில் வினியோகம் செய்யப்படும் உணவின் தரம் குறைவாக இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரம் இந்திய ரயில்வே ஒரு நாளில் 13 லட்சம் பேருக்கு உணவு வினியோகம் செய்தாலும் 0.01 சதவீதம் மட்டுமே குறைகள் இருப்பதாக புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை சரி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்’ என்றார்.