Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

'மதச்சார்பின்மை' பற்றி பேசிய ஆளுநர் ரவி கருத்துக்கள் இந்தியாவின் அரசியல் அடிப்படைகளை சிதைக்கின்றன: மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கள் இந்தியாவின் அரசியல் அடிப்படைகளை சிதைக்கின்றன என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் தொடக்கம் முதலே தமிழ்நாட்டிற்கு எதிராக அவ்வப்போது சர்ச்சையான வகையில் பேசி வருகிறார். சனாதனம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து சர்ச்சையான வகையில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் மதச்சார்பின்மை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தற்போது சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசி உள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதலில் மதசார்பின்மை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எமர்ஜென்சி காலத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவில் தான் மதசார்பின்மை என்றது புழக்கத்தில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கள் இந்தியாவின் அரசியல் அடிப்படைகளை சிதைக்கின்றன என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கள் இந்தியாவின் அரசியல் அடிப்படைகளை சிதைக்கின்றன என்ற விஷயம் மிகவும் கவலைக்குரியது. சீர்குலையாமல், அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் நாட்டாக இருக்கும் என இந்திய அரசியல் பாகம், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது.

இது "ஐரோப்பிய கொள்கை" அல்ல, இது நம் நாட்டின் அரசியல் மற்றும் மதநம்பிக்கைகள் பன்மைமையைப் பாதுகாக்கும் முக்கியமான தூணாக செயல்படுகிறது. நமது அரசியலமைப்பின் வல்லுனர்கள், குறிப்பாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், இந்தியாவின் பன்மை தன்மையை கருத்தில் கொண்டு, மதச்சார்பின்மை என்ற கொள்கையை எங்களின் அரசியலமைப்பில் சேர்த்தார்கள். இது ஒரு மதத்திற்கு ஆதரவு அளிக்காமல், அனைத்து மதங்களையும் மதிக்கவும், அரசியல் மற்றும் மதம் வெவ்வேறு துறைகளாக செயல்படவும் உறுதி செய்கிறது.

ஆளுநர் மற்றும் அவருடன் கூடியவர்களின் கருத்துக்கள், நம் அரசியலமைப்பின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கி, அதைப் பாதிக்கவா நினைக்கின்றனர்? "தர்மம்" என்ற ஒரே கொள்கையை இந்தியாவின் பன்மை மத நம்பிக்கைகளுக்கு மத்தியில் திணிக்கத் துடிக்கிறார்களா? இது நமது விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. இந்தியாவை அனைத்து மதங்களும் ஒற்றுமையாக வாழும் நாடாகக் காக்க, 'மதச்சார்பின்மையை' பாதுகாக்க நாம் அனைவரும் எடுக்கும் பொறுப்பு மிக முக்கியமானது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.