வதைக்கும் கோடை வெயிலால் வனப்பகுதிக்குள் ‘வாட்டர்’ இல்லை வரிசையா வருது ‘வைல்ட் அனிமல்ஸ்’: வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தல்
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, மான் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் கொடூர வெயிலை தாக்குப்பிடிக்க முடியாமல் தண்ணீர் தேடி மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும், குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களுக்குள் வனவிலங்குகள் புகுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது காட்டு யானை, காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட விலங்குகளின் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அவை விவசாய நிலங்களில் புகுந்து காய்கறிகளையும் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களையும் சேதப்படுத்தி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் காட்டு மாடு, யானை அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்தால் விலங்குகளின் தொல்லையாலும் பெரும்பாலான விவசாயிகள், காய்கறி விவசாயம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர்.


* தொட்டிகளில் நீர் நிரப்பப்படுமா?
வனப்பகுதியில் ஏராளமான அளவில் சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் வனப்பகுதிக்குள் நீர் இல்லாதபோது அடிக்கடி நீர் அருந்துவதற்காக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து விடுகின்றன. வெளியே வரும் வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் பயிர் வகைகளை நாசம் செய்து விடுகின்றன. இதனை தடுக்கும் வகையில் வனப்பகுதியின் பல்வேறு இடங்களில் வனத்துறையினரால் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வெயில் சுட்டெரிக்கிறது. தண்ணீர் வற்றி வறண்டுபோய் காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் வெளியே வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் வனத்துறையினர் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


