பள்ளி திறப்பு - வார விடுமுறையையொட்டி 2,510 சிறப்பு பஸ்கள் இயக்கம்: 25,946 பேர் முன்பதிவு: போக்குவரத்து துறை தகவல்
சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறையையொட்டி 2,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், 25,946 பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பு மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 30ம் தேதி (வெள்ளி) 570 பேருந்துகளும் 31ம் தேதி (சனி) 605 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 30ம் தேதி (வெள்ளி) 100 பேருந்துகளும், 31ம் தேதி (சனி) 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, மாதாவரத்திலிருந்து 30ம் தேதி 24 பேருந்துகளும், 31ம் தேதி 24 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படுகிறது.
மேலும், ஜூன் 1ம் தேதியான திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூர் மற்றும் பல்வேறு இடங்களுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 8,119 பயணிகளும், சனிக்கிழமை 7,304 பயணிகளும் மற்றும் ஞாயிறு 10,523 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


