சென்னை: பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? எனவும் பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? எனவும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது; வழக்கின் கோரிக்கைக்கும் நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கும் தொடர்பில்லை என தமிழக அரசு வாதிட்டது. இதனை தொடர்ந்து சாதி சங்கங்களை பதிவு செய்வது, பள்ளி பெயர்களில் சாதி பெயரை நீக்குவது குறித்த உத்தரவை நீதிபதி தள்ளி வைத்தார்.
