Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பணிகள் துரிதமாக துவங்கும் என எதிர்பார்ப்பு

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு நடப்பாண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை கொண்டு பணிகள் துரிதமாக தொடங்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் 2025-26ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரயில்வேத்துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இவற்றில் தெற்கு ரயில்வேயில் தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 4 கோட்டங்களில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிய வழித்தடம், இரட்டை வழிப்பாதை, ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு போன்ற பணிகள் செய்யப்படவுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தை பொருத்தளவில், மொரப்பூர்-தர்மபுரி அகல ரயில்பாதை திட்டம், ஈரோடு-பழநி அகல ரயில்பாதை திட்டம், சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டம் போன்றவை நிலுவையில் உள்ளது. இவற்றில், சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே 160 கிலோ மீட்டர் தூரத்திற்கு இருவழிப்பாதை அமைக்க கடந்த 2020ம் ஆண்டில் அனுமதி அளித்தனர். திட்ட அனுமதி வழங்கப்பட்ட நிலையிலேயே அத்திட்டப்பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்தை ரூ.1,600 கோடியில் நிறைவேற்றலாம் என திட்ட மதிப்பீடு தயார் செய்திருந்த நிலையில், தற்போது அதன் திட்ட மதிப்பு சுமார் ரூ.2,000 கோடி என்ற நிலைக்கு வந்திருக்கிறது. இச்சூழலில் நடப்பாண்டில் தான், சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

இந்த நிதியை கொண்டு ஆரம்பக்கட்ட பணிகளை ரயில்வே நிர்வாகம் துரிதமாக தொடங்குமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், சேலம்-கரூர் புதிய அகல ரயில்பாதை அமைக்கும்போதே, இருவழிப்பாதைக்கு தேவையான அளவிற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு விட்டது. அதனால், புதிதாக எங்கேயும் நிலம் எடுக்க வேண்டிய தேவையில்லை. ஏற்கனவே அமைந்துள்ள பாதை அருகில் மற்றொரு பாதையை அமைத்திடவே இத்திட்டம் போடப்பட்டுள்ளது. அதனால், அடுத்தடுத்துவரும் ஆண்டுகளில் இத்திட்டத்திற்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்தால், மிக விரைவில் பணிகள் நிறைவடைந்து இருவழிப்பாதை பயன்பாட்டிற்கு வரும். தற்போது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல திருச்சி வழித்தடம் மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாகவே சென்னை-சேலம்-கரூர்-திண்டுக்கல் பாதை கருதப்படுகிறது.

இம்மார்க்கத்தை இருவழிப்பாதையோடு முழு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், சென்னையில் இருந்து இவ்வழியே அதிகப்படியான ரயில்களை இயக்கலாம். ஏற்கனவே சென்னையில் இருந்து சேலம் வரை இரட்டை வழிப்பாதை இருக்கிறது. சேலத்தில் இருந்து திண்டுக்கல் வரை இரட்டை வழிப்பாதையை அமைத்துவிட்டால், இவ்வழித்தடம் மேம்படுத்தப்பட்ட வழியாகவும், வடமாநிலங்களில் இருந்து சேலம் வழியே தென் மாவட்டங்களுக்கு இயங்கும் ரயில்கள் அனைத்தையும் திருப்பிவிட வழிவகை கிடைக்கும். அதனால், இந்த இருவழிப்பாதை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம்-கரூர்-திண்டுக்கல் இருவழிப்பாதை திட்டத்திற்கு நடப்பாண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை கொண்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது. அடுத்தடுத்த நிதியாண்டுகளில் அதிக நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், இத்திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.