Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அவரை, பீன்ஸ் கிலோ ரூ.100க்கு விற்பனை

வேலூர்: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் வரத்து குறைவால் அவரை, பீன்ஸ் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெண்டை, கத்தரிக்காய், முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், காலிபிளவர் உள்பட பல்வேறு வகையான காய்கறிகள் வருகின்றன. தக்காளியை பொறுத்தவரை ஓசூர், கிருஷ்ணகிரி, வி.கோட்டா, பலமநேர், கோலார் பகுதிகளில் இருந்து வருகிறது. கேரட், பீட்ரூட் போன்றவை கேரள மாநிலம் மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இருந்து வருகிறது.

வெங்காயம், இஞ்சி, பூண்டு போன்றவை வெளிமாநிலங்களில் இருந்து வருகிறது. அதேபோல் பிற காய்கறிகளும் வேலூர் மார்க்கெட்டுக்கு வருகின்றன. இந்நிலையில் அவரை, பீன்ஸ் வரத்து தற்போது குறைந்துள்ளது இதனால் ரூ.70 வரை விற்று வந்த அவரை இன்று ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது. இதேபோல் பீன்ஸ் கிலோ ரூ.65 முதல் ரூ.70 வரை விற்று வந்த நிலையில் இன்று ரூ.100 வரை விற்பனையாகிறது. அதேபோல், மேலும் சில காய்கறிகளின் விலையும் சிறிதளவு உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக காய்கறி வியாபாரிகள் கூறுகையில், ‘தொடர் மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவரை, பீன்ஸ் உள்ளிட்ட சில காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. மேலும் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் கனமழையின் காரணமாக கேரட் வரத்து குறைந்துள்ளது. வரும் நாட்களில் கேரட் வரத்து குறைந்தால், விலை அதிகரிக்கும்’ என்றனர்.