Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை அமைக்கப்படவுள்ள உயர்மட்டப் பாலத்திற்கான இரும்பு தூண்கள், தூலங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு , இன்று (14.05.2025) தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, மகாராஷ்டிரா மாநிலம், மும்பை, வாடா என்னும் இடத்தில் அமைந்துள்ள M/s.J.Kumar Infraprojects என்ற தொழிற்பட்டறையில் தயாரிக்கப்பட்டு வரும், சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை, நான்கு வழித்தட உயர்மட்டப் பாலம் கட்டுவதற்கு, இரும்பு தூண்கள்(Iron Pillar), தூலங்கள்(Beam) அதன் தரம் மற்றும் அளவுகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னை மாநகரின் மையப்பகுதியில் உள்ள மிக முக்கிய சாலையான அண்ணா சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.20 கி.மீ. தூரத்திற்கு, 15 மீ. அகலத்திற்கு உயர்மட்ட சாலை அமைக்க ரூ.621 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, 19.1.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

முக்கிய அம்சங்களான, உயர்மட்ட சாலை மேம்பாலம், மெட்ரோ இரயில் சுரங்கபாதை உள்ள இடங்களில் 2 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் மண்ணின் உறுதி தன்மை (CBR) குறைவாக உள்ளது. அதனை அதிகரிக்கும் வகையில் “ஜியோ சிந்தெட்டிக் லேயர்ஸ் (Geo Synthetic Layers)” என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தினால் மண்ணின் உறுதித் தன்மை அதிகரித்து பாலத்தைத் தாங்கும் வகையிலும் மற்றும் மெட்ரோ இரயில் சுரங்கப்பாதை பாதிக்காத வகையில் அமைக்கப்பட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த சாலையில் 7 முக்கிய சாலைச் சந்திப்புகளை கடக்கும் வண்ணம் இந்த உயர்மட்டச் சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காலங்களில் பயண நேரம் 30 முதல் 35 நிமிடம் ஆகிறது. இந்த உயர்மட்டப் பாலம் அமைக்கப்படுவதால் பயண நேரம் 3 நிமிடமாக குறையும்.

ஆகவே, சைதாபேட்டை முதல் தேனாம்பேட்டை வரை அமைக்கப்படும் உயர்மட்டப் பாலத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள இரும்பு தூண்கள் தயாரிக்கப்படும் மும்பை, வாடாவில் உள்ள M/s.J.Kumar Infraprojects என்ற தொழிற்பட்டறையில் தயாரிக்கப்பட்டு வரும் இரும்பு தூண்கள்(Iron Pillar), தூலகங்கள்(Beam), அதன் தரம் மற்றும் அளவுகளை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின்போது, தலைமைப் பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கே.ஜி.சத்தியபிரகாஷ், சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) இரா.சந்திரசேகர் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.