Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே மீட்கப்பட்ட குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் பணியில் 3வது நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்குட்பட்ட குமரன் சாலை பகுதியில் குட்டி யானை ஒன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு தன்னந்தனியே அங்கும், இங்கும் ஓடியபடி சுற்றித்திரிவதை அப்பகுதியில் உள்ளவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் குமரன் சாலை பகுதியில் சுற்றித்திரிந்த யானையை அருகே இருந்த வேட்டைத்தடுப்பு காவலர் முகாமிற்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து சோர்வுடன் இருந்த குட்டி யானையை வன கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். இதில் சுமார் 9 மாதமுள்ள ஆண் குட்டி யானை என்பதும், தாயை பிரிந்த ஏக்கத்தில் உடல்நலம் குன்றி சோர்வுடன் காணப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து யானையின் சோர்வை போக்க இரு பாட்டில்கள் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு, பழங்கள், இளநீர் மற்றும் பசும்புற்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர். இதைதொடர்ந்து யானை சுறுசுறுப்பாக சுற்றிவர துவங்கியது. தொடர்ந்து மீட்கப்பட்ட குட்டியானையின் தாயை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்று 3வது நாளாக ட்ரோன் கேமரா உதவியுடன் வனப்பகுதியில் தாய் யானையை வனத்துறையினர் தேடினர்.

மேலும், பரிசல்கள் மற்றும் படகுகள் மூலமாக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதி ஓரங்களிலும் தாய் யானையை வனத்துறையினர் தேடினர். சிறுமுகை மற்றும் சத்தியமங்கலம் வனத்துறையினர் இணைந்து 5 தனிக்குழுக்கள் அமைத்து தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ட்ரோன் மூலமாகவும் தாய் யானையை தேடும் பணியை வனத்துறையினர் தொடர்ந்து வருகின்றனர். தாய் யானை கிடைத்தவுடன் குட்டி யானையை அதனுடன் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.