Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வரலாறு காணாத வகையில் 52 செ.மீ கனமழை கொட்டித் தீர்த்தது வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலங்கானா, ஆந்திரா: 10 பேர் பரிதாப பலி

ஐதராபாத்: கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீக்கு மழை கொட்டியது. கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் கடந்த 2 நாட்கள் தொடர் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில், கம்மம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 52.1 செ.மீக்கு மழை பெய்ததின் விளைவாகக் கம்மம்-வாரங்கல் ரயில் வழித்தடத்தின் ஒரு பகுதி வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. மகபூபாபாத் மாவட்டம், கேசமுத்திரம் மண்டலம் தல்லபூசப்பள்ளி ரயில் நிலையம் அருகே மழை வெள்ளத்தால் ரயில்வே தண்டவாளம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மசூலிப்பட்டினம் எக்ஸ்பிரஸ் மஹபூபாபாத்தில் நிறுத்தப்பட்டது, பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக தவித்து வருகின்றனர். கனமழையால் 100 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 54 ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

தலைநகர் ஐதராபாத்தில் கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பலரும் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். இதனால் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வருவாய்த் துறை, நீர்ப்பாசனத்துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளை நிவாரண பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார். கம்மம் மாவட்டத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால், ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்கள். குண்டூர் மாவட்டத்தில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒரு ஆசிரியரும் இரு மாணவர்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். தெலங்கானாவில் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆந்திராவில் விஜயாவாடா, மச்சிலிபட்னம், குடிவாடா, மங்களகிரி போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை வெள்ளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் வெள்ள நிலைமை குறித்து மாநில உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் அனிதா கூறுகையில், ‘‘கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக என்டிஆர், கிருஷ்ணா, பாபட்லா, குண்டூர், பல்நாடு ஆகிய மாவட்டங்களில் இதுவரை 100 மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு 294 கிராமங்களை சேர்ந்த 13,227 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் 61 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கனமழைக்கு போலீசார், என்.டி.ஆர்.எப் மற்றும் எஸ்.டி.ஆர்.எப் வீரர்கள் வெள்ளத்தில் சிக்கிய 600 பேரை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். மழையால் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. 7218 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது’’ என்றார். ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு நிவாரண பணிகளுக்காக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ரூ.3 கோடி விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்று ஆய்வு செய்தார். இதற்கிடையில், கோதாவரி அற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் நிலையில் மற்ற ஆறுகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடும் என்று மத்திய நீர்வளத்துறை ஆணையம் எச்சரித்துள்ளது. வெள்ளத்தால் ஆந்திராவில் 9 பேரும், தெலங்கானாவில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.