Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: இஸ்ரேலுக்கான இந்திய தூதர் பேட்டி

புதுடெல்லி: ராணாவை அமெரிக்கா ஒப்படைத்தது போல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இந்திய தூதர் பேட்டியளித்தார். இஸ்ரேலில் நாட்டில் இருக்கும் இந்திய தூதர் ஜே.பி.சிங் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிந்துவிடவில்லை. தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச கூட்டணியை உருவாக்க வேண்டும். பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலானது, அங்குள்ள தீவிரவாத குழுக்களையும், அவற்றின் உள்கட்டமைப்பையும் குறிவைத்து நடத்தப்பட்டதாகும்.

இந்தியாவின் ராணுவ தளங்களை தாக்கியதற்கு பதிலடியாக, கடந்த 10ம் தேதி அதிகாலை நூர் கான் தளம் மீது இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பாகிஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவர்களது ராணுவ இயக்குநர், இந்தியாவுடன் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று கோரினார். இந்தியா, தீவிரவாதிகளை எங்கிருந்தாலும் அழித்து, அவர்களின் உள்கட்டமைப்பை தகர்க்கும் தாக்குதல் உத்தியை பின்பற்றி வருகிறது. அதனால் தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் 1960ல் கையெழுத்திட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் போர்ச் செயல் என்று கூறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய கருப்பொருளான நல்லெண்ணம் மற்றும் நட்பு என்ற வார்த்தைகளை பாகிஸ்தான் மதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து நடத்தியும், ஆதரித்தும் வருகிறது.

ரத்தமும் நீரும் ஒன்றாக பாய முடியாது என்று பிரதமர் மோடி கூறியது போல், தீவிரவாதத்தை நிறுத்தவில்லை என்றால் சிந்து நதிநீர் திறக்கப்படாது. மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பாவின் தலைவர்களான ஹபீஸ் சயீத், சாஜித் மிர் மற்றும் ஜகியுர் ரெஹ்மான் லக்வி ஆகியோரை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும். மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தஹவ்வூர் ஹுசைன் ராணாவை அமெரிக்கா ஒப்படைத்துள்ளது. பாகிஸ்தானும் இதை செய்ய வேண்டும். தீவிரவாதம் உலகளாவிய அச்சுறுத்தல் என்பதால் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஒருங்கிணைந்து தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டணியை உருவாக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.