Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு: தேசமே முதலில் என்பதே பாஜ மாடல்

புதுடெல்லி: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு மாநிலங்களவையில் பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, தேசமே முதலில் என்பதே பாஜ மாடல் என குறிப்பிட்டார். மக்களவையை தொடர்ந்து, மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து நேற்று பேசியதாவது: அம்பேத்கர் மீது காங்கிரஸ் வெறுப்பு மற்றும் கோபத்தை கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின் சிற்பியான அவருக்கு பாரத ரத்னா விருதை காங்கிரஸ் வழங்கவில்லை. அதற்கு அவருக்கு தகுதியில்லை என்று கருதியது.

அப்படி அம்பேத்கரை மதிக்காத அவர்கள் இப்போது ஜெய் பீம் என்று பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இன்று எங்கு சென்றாலும், அரசியலமைப்பை நகல்களை எடுத்துச் செல்பவர்கள் தான் அந்த அரசியலமைப்பை அடியோடு நசுக்கப் பார்த்தவர்கள். எதிர்க்கட்சியினர் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் காங்கிரசை புகழவில்லை என்பதற்காக திரைப்பட துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காங்கிரஸ் அரச குடும்பத்தின் தவறான பொருளாதார கொள்கையால் நாட்டின் வளர்ச்சி பாதித்தது.

அவர்களின் லைசென்ஸ் ஒதுக்கீடு ராஜ்ஜியம் ஊழலுக்கு வழிவகுத்தது. ஆனால், பொருளாதாரத்தின் வளர்ச்சி பாதித்ததற்கு இந்து வளர்ச்சி விகிதத்தை காரணம் காட்டினார்கள். இந்து சமூகம் மீது குற்றம்சாட்டப்பட்டது. அது களங்கப்படுத்தப்பட்டது. 50, 60 ஆண்டுகளாக மக்களுக்கு அரசியலில் மாற்று என்று எதுவும் இல்லாமல் இருந்தது. ஆனால், 2014க்குப் பிறகு, ஒரு புதிய மாடலை நாடு கண்டது, இது குறிப்பிட்ட சிலரை மட்டும் திருப்திப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக அனைரையும் திருப்திபடுத்தும் மாடல்.

அனைவரையும் உள்ளடக்கிய நாட்டின் முன்னேற்றமே முக்கியம் என்பதற்கு இணங்க, தேசமே முதலில் என்பதே பாஜ மாடல். இதை நாட்டு மக்கள் புரிந்துகொண்டு, சோதித்து பார்த்து, இப்போது ஆதரித்துள்ளனர். இதை காங்கிரசிடம் எதிர்பார்ப்பது மிகப்பெரிய தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்துவது, குடும்பமே முதலில் என்பதே காங்கிரஸ் மாடல். அதனால்தான் அக்கட்சியின் கொள்கைகள், பேச்சு, நடத்தை அனைத்தும் ஒரு குடும்பத்தை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன.

காங்கிரசின் பிடியிலிருந்து விடுபட்ட பிறகு நாடு நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இப்போது அது உச்சத்தில் பறந்து கொண்டிருக்கிறது. நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களிடமிருந்து உத்வேகம் பெற்று நாங்கள் முன்னேறி வருகிறோம். சில அரசியல் வந்தாலும், பொது சிவில் சட்டம் போன்ற முடிவுகளை எடுக்க நாங்கள் தைரியம் கொண்டுளோம். சாதிகள் மூலம் விஷத்தை பரப்ப முயற்சிகள் நடக்கின்றன.

இடஒதுக்கீடு பிரச்னை எழும்போதெல்லாம், அது நாட்டில் பிளவை ஏற்படுத்துவதற்காகவே செய்யப்பட்டது. முதல் முறையாக, நாங்கள், யாரிடமிருந்தும் இடஒதுக்கீட்டை பறிக்காமல் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கினோம். எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்கள் அதை வரவேற்றன, யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. இவ்வாறு 90 நிமிடங்கள் பிரதமர் மோடி பேசினார்.