Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்திட வேண்டும்: சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தல்

சென்னை: மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் தேவையான இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்திட வேண்டுமென அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது; "நாடு முழுவதும் சிறிதளவில் இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரே வாரத்தில் 4 மடங்கு உயர்ந்து, கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் ஒரே வாரத்தில் 333 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும், நம் தமிழகத்தில் 69 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

‘பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை’ எனினும், கொரோனா பரவலை தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் முழு பொறுப்பு.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்புக்கு தயாராகி வருகின்ற இச்சூழலில், இந்தக் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளிலும், மக்கள் அதிகம் கூடுகிற பொது இடங்களிலும், நீர் நிலைகளிலும் நோய்த்தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டிட வேண்டும்.

அதுபோல, அரசு மருத்துவமனைகளில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு கால தாமதமின்றி உரிய சிகிச்சைகளை அளிப்பதோடு, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் தேவையான இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்திட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.