சென்னை: பொருளாதார ஆய்வறிஞர் பேராசிரியர் கலையரசன் மீதான காவல்துறையின் அத்துமீறிய கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொறுப்பு தலைவர் அச.உமர் பாரூக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் முக்கியப் பொறுப்பு வகித்தவரும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயாரிப்பதில் பெரும் பங்களிப்பை வழங்கியவருமான சர்வதேசப் புகழ்பெற்ற பொருளாதார ஆய்வறிஞர் பேராசிரியர் ஏ. கலையரசன் அவர்களை, அதிகாலை வேளையில் சீருடை அணியாத காவலர்கள் அத்துமீறிப் பிடித்துச் சென்று அலைக்கழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தவெக சட்டமன்ற உறுப்பினர் குறித்து கருத்து பதிவிட்டதாகக் கூறி, உரிய முறையான ஆவணங்களோ, எஃப்.ஐ.ஆர் நகலோ இன்றி, சாதாரண உடையில் வாடகை காரில் வந்த போலீசார் அதிகாலை நேரத்தில் அவரை ஒரு குற்றவாளியைப் போல இழுத்துச் சென்றுள்ளனர். தனக்கு இன்ஸ்டாகிராம் கணக்கே இல்லை என்று அவர் திட்டவட்டமாக எடுத்துக்கூறிய பிறகும், அவசர அவசரமாக அவர் மீது நடத்தப்பட்ட இந்த அராஜக நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது.
மாநில மற்றும் தேசிய அளவில் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பைச் செய்துவரும் ஒரு மதிக்கத்தக்க அறிஞரை, அடிப்படை விசாரணை கூட முறையாக மேற்கொள்ளாமல், இன்ஸ்டாகிராம் போலிக் கணக்குகளைச் சுட்டிக்காட்டி அவரது இல்லத்திற்கே சென்று பொதுவெளியில் அவமதித்திருப்பது சட்டத்தின் மாண்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை மீறி, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கக்கூட வாய்ப்பளிக்காமல் செல்போனைப் பறிமுதல் செய்து, சட்டவிரோதமாக அழைத்துச் சென்று துன்புறுத்திய காவல்துறையினரின் இந்த போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
இச்சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி, வரம்புமீறி செயல்பட்ட காவல் அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக துறைசார்ந்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கும் குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இத்தகைய போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதுன் என்று குறிப்பிட்டுள்ளார்.


