Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வயநாடு மக்களவை தொகுதியில் 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி: ராகுல்காந்தியின் சாதனையை முறியடித்தார்

திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் ராகுல் காந்தியின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உபி மாநிலம் ரேபரேலி மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இந்தத் தொகுதிக்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யன் மொகேரி, பாஜ கூட்டணி சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்பட 15 பேர் போட்டியிட்டனர். நடந்து முடிந்த தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. இது கடந்த தேர்தலை விட 8 சதவீதம் குறைவாகும். இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே பிரியங்கா காந்தி முன்னிலை பெற்று வந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் வாக்குகள் வித்தியாசத்தை அதிகரித்துக் கொண்டே சென்றார். வாக்கு எண்ணிக்கை முடிவில் பிரியங்கா காந்தி தனக்கு அடுத்தபடியாக வந்த இடதுசாரி கூட்டணி வேட்பாளர் சத்யன் மொகேரியை விட 4,10,931 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பாஜ வேட்பாளர் நவ்யா ஹரிதாசுக்கு மூன்றாவது இடம் மட்டுமே கிடைத்தது.

ராகுல் காந்தியின் சாதனையை முறியடித்தார்: கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தான் ராகுல் காந்தி முதன் முதலாக வயநாட்டில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். வயநாடு தொகுதியில் இது ஒரு பெரும் சாதனையாகும். இதன்பின் இந்த ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தியின் வாக்குகள் வித்தியாசம் சற்று குறைந்தது. அவர் 3.64 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரான ஆனி ராஜாவை தோற்கடித்தார். இந்நிலையில் பிரியங்கா காந்தி தற்போது இந்த சாதனையை முறியடித்து 4.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த தேர்தலை விட 8 சதவீதம் குறைந்ததால் பிரியங்கா காந்தியின் வாக்குகள் வித்தியாசமும் குறையும் என்று கருதப்பட்டது. ஆனால் அதை பொய்யாக்கி அவர் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குகள் விவரம்

பிரியங்கா காந்தி

(காங். கூட்டணி) 6,22,338

சத்யன் மொகேரி

(இடதுசாரி கூட்டணி) 2,11,407

நவ்யா ஹரிதாஸ்

(பாஜ) கூட்டணி 1,09,939

* நாடாளுமன்றத்தில் உங்கள் குரலாக ஒலிப்பேன்: பிரியங்கா நெகிழ்ச்சி

பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘வயநாட்டில் இருக்கும் என் அன்பு சகோதரிகளே, சகோதரர்களே நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கைக்கு நான் மிகுந்த நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். இந்த வெற்றியை உங்களின் வெற்றியாக நீங்கள் உணர்வதை நான் உறுதி செய்வேன். உங்களை பிரதிநிதித்துவப்படுத்த நீங்கள் தேர்ந்தெடுத்த நபர் உங்களில் ஒருவராக உங்களது நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை புரிந்துகொண்டு உங்களுக்காக போராடுவதையும் உறுதி செய்வேன். நாடாளுமன்றத்தில் உங்களது குரலாக ஒலிப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். வயநாடு மக்கள் எனக்களித்த இந்த மரியாதை மற்றும் மிகுந்த அன்புக்கு நன்றி கூறுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் முன்னிலை பெற்று வந்த நிலையில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து தேர்தல் பிரசாரத்துக்கு அளித்த ஆதரவிற்காக நன்றி தெரிவித்தார்.